ஆஸ்திரேலியாவில் நடக்கிறது அடுத்த டி.20 உலகக்கோப்பை..
வரும் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2007 ம் ஆண்டு முதல் டி-20 கோப்பை நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள டி-20 உலகக்கோப்பைப் போட்டிகளில், அதிகபட்சமாக விண்டீஸ் அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
அதே போல் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன. கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் வைத்து நடத்தப்பட்ட டி.20 உலகக்கோப்பை தொடரில் விண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்று நடப்பு சாம்பியனாக உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டி.20 உலகக்கோப்பை நடத்தப்படுவதே வழக்கம், இதன் படி பார்த்தால் இந்த ஆண்டு டி.20 உலகக்கோப்பை நடைபெற வேண்டும். ஆனால் அனைத்து அணிகளும் இந்த வருடம் பல்வேறு தொடர்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி.20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக, 2020ம் ஆண்டு தான் அடுத்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதமே ஐ.சி.சி., அறிவித்தது. இந்த தொடர் தென் ஆப்ரிக்காவிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ நடத்தப்படலாம் என்று கருதப்பட்டது.
இந்நிலையில் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள டி.20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவில் வைத்து நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்த தொடர் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நாளை (30.1.2018) காலை 10 மணியளவில் மெல்போர்னில் வைத்து ஐ.சி.சி., அறிவிக்க உள்ளது.