இஷாந்த் சர்மாவிற்கு வலது விலா எலும்பில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பு இருந்தாலும், அவரை விளையாட வைத்து காயத்தின் தன்மையை அதிகப்படுத்த வேண்டாம் என இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் 13 இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை, பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான அணியில் ரஹானே, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின், முகமது சமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் இஷாந்த் சர்மா இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். சிட்னி டெஸ்டுக்கு அஸ்வின் உடற்தகுதி பெறவில்லை அணியின் செய்தித் தொடர்பாளர் அறிவித்த நிலையில், தற்போது 13 பேர் கொண்ட பட்டியலில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். நாளை போட்டி தொடங்கும் போது, சூழலை பொறுத்து, களத்தில் விளையாடும் 11 பேரில் அஸ்வின் இடம் பிடிப்பாரா என்பது தெரியவரும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது
பாண்டியா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை. இதுபோல இந்த டெஸ்ட் தேர்விலும் ஆச்சர்யங்களை வழங்கியுள்ளார் இந்திய கேப்டன் கோலி. இந்த 13 பேரில் அஸ்வினும் உமேஷ் யாதவும் அணியில் இடம்பெற மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த், ஜடேஜா, பூம்ரா, ஷமி, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், அஸ்வின்.
இந்திய அணியின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், “ உடற்தகுதித் தேர்வில் அஸ்வின் தோல்வி அடைந்துவிட்டதால் 4-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார்” என்று தெரிவித்திருந்தார் இந்தச் சூழலில் 13 பேர் கொண்ட அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி மைதானம் பேட்ஸ்மேனுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் நன்கு ஒத்துழைக்கும். ஆதலால், இந்திய அணியில் கூடுதலாக பேட்ஸ்மேன் எடுக்கப்போகிறார்களா, அல்லது சுழற்பந்துவீச்சாளரை சேர்க்கப்போகிறார்களா என்பது தெரியவில்லை.