ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் அடித்த பந்து தாக்கியதில் இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் படுகாயமடைந்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா- இந்தியா மோதும் போட்டி இன்று நடக்கிறது. இதற்கான பயிற்சியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த டேவிட் வார்னருக்கு இங்கிலாந்தை சேர்ந்த மித வேகப்பந்துவீச்சாளர் ஜெய் கிஷான் பந்துவீசினார். அப்போது வார்னர் அடித்த பந்து, நேராக ஜெய்கிஷான் தலையில் பலமாகத் தாக்கியது. இதில் அவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். உடனடி யாக மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவர், தலை கடுமையாக வலிக்கிறது என்று கூறியதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வார்னர், சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபடமால் இருந்தார். அடிபட்ட வீரருக்கு பயப்படும் வகையில் காயம் இல்லை என்று அறிந்த பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். காயமடைந்த ஜெய் கிஷான் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று மாலை 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் களைகட்டி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

முதல் போட்டியில் தென்னாப்ரிக்க அணியை தோற்கடித்த உற்சாகத்தில் இந்திய அணி இருக்கிறது. ரோகித் ஷர்மா ஃபார்முக்குத் திரும்பியது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. பந்துவீச்சில் யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் கை கொடுத்தனர். ஷிகர் தவான் நல்ல தொடக்கத்தை கொடுத்தால் இந்திய அணிக்கு பலமாக இருக்கும்.
ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸையும் வீழ்த்தியிருக்கிறது. ஓராண்டு தடைக்குப் பிறகு வந்த வார்னர், முதல் போட்டியிலேயே வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் வேகத்தில் விறுவிறுவென விக்கெட்களை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை, அனுபவ வீரர் ஸ்டீவன் ஸ்மித், குல்டர் நைட் உடன் சேர்ந்து கரைசேர்த்தார்.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அசத்தி வருகின்றனர். பலம் வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது