இந்திய தேசிய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முன் யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும் என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.
வீரர்களின் தேர்வுக்கு முன்பு யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும்- அசாருதீன்
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்றால் வீரர்கள் கட்டாயம் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும். குறைந்தது 16.1 புள்ளிகள் பெற வேண்டும். இந்திய சீனியர் மற்றும் இந்தியா ‘ஏ’ கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த அணிகளில் இடம் பிடித்திருந்த அம்பதி ராயுடு மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனது.

அதேபோல் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி யோ-யோ டெஸ்ட் தோல்வியால் அணியில் இடம்பெறவில்லை.
இதனால் யோ-யோ டெஸ்ட் மீது முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் வீரர்கள் தேர்விற்கு முன்பே யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரையில் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.
ஆனால், அணியில் தேர்வானபின், யோ-யோ டெஸ்டால் அவரது வாய்ப்பு பறிபோகியுள்ளது. அணி தேர்வுக்கு முன் யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள நிலை எல்லோருக்கும் தர்மசங்கடமாக உள்ளது’’ என்றார்