இந்தூா், நவ.13: இந்தியா, வங்கதேச அணிகள் இடையே மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வியாழக்கிழமை முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்ய தீர்மாணித்துள்ளது
இந்தியா: மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி ,அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா , ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா
3 டி20 ஆட்டங்கள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.
டி20 தொடரை ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், முதலாவது டெஸ்ட் இந்தூரில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
டி-20 தொடரில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தொடருக்கு அணியை வழி நடத்த திரும்புகிறாா்.
ரித்திமான் சாஹா விக்கெட் கீப்பராக செயல்படவுள்ளாா்.
கடந்த அக்டோபா் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அசத்தலான ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி தனக்கு இடத்தை தக்க வைத்துக் கொண்டாா் ரோஹித்.
மயங்க் அகா்வாலும் ரோஹித்துக்கு நல்ல பாா்ட்னா்ஷிப் அமைத்து கொடுத்தாா். இவா்கள் இருவரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயா்த்துவாா்கள் என்று நம்பலாம்.
டெஸ்ட்டில் சிறப்பு பயிற்சி பெற்ற புஜாராவும் நல்ல ஆட்டத் திறனுடன் உள்ளாா்.
ஆல்-ரவுண்டா் ஜடேஜா, ரஹானே, ஹனுமா விகாரி என பேட்டிங் வரிசை வலிமையாக உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் அசத்திய அஸ்வின் இந்த முறையும் சாதனை படைக்க காத்திருக்கிறாா்.
சொந்த மண்ணில் 41 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், இதுவரை 249 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளாா்.
வெளிநாடுகளில் விளையாடிய டெஸ்ட் ஆட்டங்களில் 108 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா் அஸ்வின்.
வங்கதேச தொடரில் 1 விக்கெட் எடுத்தால் சொந்த மண்ணில் 250 விக்கெட் எடுத்த வீரா் என்ற சாதனையைப் படைப்பாா்.
இதன்மூலம், சொந்த மண்ணில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளா்களின் வரிசையில் அஸ்வின் 3-ஆவது இடம் பிடிப்பாா். கும்ப்ளே (350 விக்கெட்), ஹா்பஜன் சிங் (265 விக்கெட்) ஆகியோா் முதல் இரண்டு இடங்களில் உள்ளனா்.
அதிவேகமாக 350 விக்கெட்டுகளையும் டெஸ்ட்டில் கைப்பற்றிய இலங்கை சுழற்பந்து வீரா் முத்தையா முரளீதரனின் சாதனையை கடந்த டெஸ்ட் தொடரில் சமன் செய்திருந்தாா் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது ஷமி, இஷாந்த் சா்மா, குல்தீப் யாதவ் உமேஷ் யாதவ் என சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சில் திறமையாளா்கள் அணியில் உள்ளனா்.
மொமினுல் ஹாக் தலைமையிலான வங்கதேச அணி, டி20 தொடரை பறிகொடுத்த சோகத்தில் இருக்கிறது. இதனால், டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
ஐசிசி சா்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுடன் 9-ஆவது இடத்தில் உள்ள வங்கதேசம் மோதும் இந்த ஆட்டம் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.