மாநில சங்கங்கள் வெளிப்படையான வகையில் டி 20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என பிசிசிஐ அறியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநில கிரிக்கெட் லீக் போட்டிகளை வெளிப்படையாக நடத்த 10 வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. இதற்கான அங்கீகாரம் கிரிக்கெட் நிர்வாகிகள் குழு (சிஓஏ) விடம் பெறப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. மாநில லீக் போட்டிகளில் முறைகேடு, ஊழலை ஒழிப்பதற்காக இந்த வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லீக் போட்டிகளை நடத்துவதற்கான வழிமுறைகள், ஊழல் முறைகேடு தடுப்பு நடவடிக்கைகள், வெளிமாநில வீரர்கள், உதவியாளர்கள் பங்கேற்புக்கு அனுமதி கிடையாது, இதன் மூலம் பயிற்சியாளர்கள், நடுவர்கள், ஆட்ட நடுவர்கள் அனைவரும் தொடர்புடைய மாநிலங்களில் இருந்தே நியமிக்கப்பட வேண்டும்.
ஏப்ரல், மே மாத ஐபிஎல் சீசனின் போது மாநில சங்கங்கள் லீக் போட்டிகளை நடத்த முடியாது. அதற்கு பதிலாக மார்ச் மாதத்தில் மூன்று வாரங்கள், அல்லது ஜூன் மத்தியில் இருந்து செப்.14-ஆம் தேதி வரை லீக் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம். மேலும் மாநிலங்களுக்கு இடையிலான ஆட்டங்களையும் மாநில சங்கங்கள் நடத்த முடியாது.
மேலும் மாநில அளவிலான போட்டிகளை, பிசிசிஐயின் ஊழல் தடுப்பு அமைப்பு கண்காணிக்கும். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 2 ஏசியு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். போட்டிகள் தொடர்பாக வீரர்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள், ஆட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.
மேலும் வீரர்கள் அறை, ஆட்ட நிர்வாகிகள் பகுதியில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், ஆட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை பதிவாகும் காட்சிகள் ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பரிசுகளை வீரர்கள், அதிகாரிகள் வாங்கி இருந்தால் அதன் விவரங்களை அளிக்க வேண்டும்.
லீக் போட்டிகளுக்கு அங்கீகாரம்: மாநில சங்கங்கள் லீக் போட்டிகளை நடத்த அனுமதி பெற போட்டி தொடங்குவதற்கு 45 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே லீக் போட்டிகளை நடத்தும் மாநில சங்கங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
அதில் போட்டியை நிர்வாகம் செய்யும் குழுவினர், அடிப்படை வசதிகள், வீரர்கள், உதவி அதிகாரிகள், அணி உரிமையாளர்கள், காப்பாளர், ஸ்பான்ஸர், போன்ற விவரங்களை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கர்நாடகம், தமிழககத்தில் டி 20 லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன.