ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருக்கும் ஏ பிரிவு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன.
சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு வங்கதேசம் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்த பிறகு, தங்களது பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அதன் பிறகு புதிய தேர்வுக்குழுவை நியமிக்க தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது இதற்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கின்றன.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மும்பையில் பிசிசிஐ மேல்மட்ட குழுவினர் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் புதிய தேர்வுக்குழு மற்றும் டி20 போட்டிகள், 50-ஓவர்கள் போட்டிகளுக்கென பல்வேறு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
அத்துடன் டி20 கேப்டன் பொறுப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கும், 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் மாற்றம் கொண்டு வரலாமா? வேண்டாமா? என்கிற ஆலோசனைகளும் நடந்திருக்கின்றன.
மேலும் 2022-23 ஆம் ஆண்டுகளுக்கான வீரர்களின் ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இதில் யாரை நீக்கலாம்? யாரை புதிதாக சேர்க்கலாம்? மற்றும் யாருக்கு ப்ரமோஷன் கொடுக்கலாம்? ஆகியவை பற்றிய ஆலோசனைகளும் நடத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் பற்றிய விவாதத்தில், ஹர்திக் பாண்டியாவிற்கு டி20 கேப்டன் பொறுப்பு கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தது. இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியிடும் என்றும் தெரிகிறது.
ஒப்பந்தப்படி ஹர்திக் பாண்டியா சி பிரிவில் இருக்கிறார். தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆகையால் அவரை ஏ பிரிவு ப்ரோமோஷன் கொடுக்க ஆலோசனையில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
சி பிரிவில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஏ பிரிவிற்கு ப்ரோமோஷன் கொடுக்கப்பட்டால் அவரது சம்பளம் 5 கோடியாக உயரும். தற்போது இருக்கும் சம்பளத்திலிருந்து ஐந்து மடங்கு உயர்வு கிடைக்கும்.
மற்றொரு டி20 நட்சத்திரம் சூரியகுமார் யாதவ், சி பிரிவில் இருக்கிறார். அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். ஆகையால் அவருக்கும் ஏ பிரிவு ப்ரோமோஷன் கொடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. குறைந்தபட்சம் பி பிரிவு ப்ரோமோஷனை எதிர்பார்க்கலாம்.
இவர்களுடன் சேர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன் தற்போது பிசிசிஐ ஒப்பந்தத்தில் இல்லை. அவரை சி பிரிவில் ஒப்பந்தம் செய்வதற்கும் ஆலோசனைகள் நடந்துள்ளது.
பிசிசிஐ ஒப்பந்தம் மற்றும் சம்பள விவரங்கள்
ஏ ப்ளஸ் பிரிவு – 7 கோடி ரூபாய்
ஏ பிரிவு – 5 கோடி ரூபாய்
பி பிரிவு – 3 கோடி ரூபாய்
கடைசியாக, சி பிரிவு – 1 கோடி ரூபாய்