உச்சநீதிமன்றம் உத்தரவின்படி பிசிசிஐ இந்தியன் கிரிக்கெட்டர்கள் சங்கத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது. கடந்த ஜூலை மாதம் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்வதற்கான காலக்கெடு வருகிற 21-ந்தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் முன்னாள் வீரர்கள் தங்களது பெயர்களை உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் பட்டியலில பெயரை சேர்க்க முன்னாள் வீரர்களுக்கான தகுதி அடிப்படை:
1. எந்தவொரு கிரிக்கெட் வகையாக இருந்தாலும் சரி, ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் குறைந்தது ஒரு போட்டியிலாவது விளையாடியிருக்க வேண்டும்.
2. வீரர்கள் சீனியர் அளவில் குறைந்தது 10 முதல்தர போட்டிகளிலாவது விளையாடியிருக்க வேண்டும்.
3. பெண் கிரிக்கெட்டர்கள் குறைந்தது ஐந்து முதல்தர போட்டிகளிலாவது விளையாடியிருக்க வேண்டும்.
4. மாற்றுத்திறனாளி வீரர்கள் ஐசிசி அல்லது பிசிசிஐ-யால் அங்கீகரிக்கப்பட்டதில் சர்வதேச போட்டி அல்லது முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.
சங்கத்தின் முதல் தேர்தல் அடுத்த மாதம் 11-ந்தேதி பிசிசிஐ-யின் தேர்தல் அதிகாரி மேற்பார்வையில் நடைபெற இருக்கிறது.
பிசிசிஐ-யின் ஒப்பந்த பட்டியலில் இன்னமும் நீடிப்பவர் தினேஷ் கார்த்திக். குறுகிய ஓவர் கொண்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு, இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாய்ஸில் இன்னமும் இவர் நீடிக்கிறார். தவிர, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
இந்த அணியின் உரிமையாளரான ஷாருக்கான், கரீபிய தீவில் நடக்கும் சிபிஎல். தொடரில் பங்கேற்கும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இதற்கிடையில் அந்த அணியின் துவக்க போட்டியை காண முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலமுடன் அந்த அணியின் ஜெர்சியை அணிந்து தினேஷ் கார்த்திக் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நீங்கள் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர்களின் ஓய்வறையில் இருக்கும் புகைப்படம் எங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களது மத்திய ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று அவரிடம் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு தற்போது தினேஷ் கார்த்திக் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “பிசிசிஐ.,யின் அனுமதி பெறாமல் அங்கு சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி டி.கே.ஆர்., தொடர்பான எவ்வித செயல்பாடுகளில் பங்கேற்க மாட்டேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த கிரிக்கெட் வீரர் என்ற அடிப்படையில் ஐபிஎல்., அல்லாத தனியார் லீக் தொடருக்காக நிகழ்ச்சியில் தினேஷ் பங்கேற்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.