இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி அட்டவணைப்படி ஜூலை மாதம் இலங்கையில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கைச் சுற்றுப்பயணம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.
இதையடுத்து பிசிசிஐக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. ஜூலை மாதம் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. எனினும் இந்திய அரசின் வழிகாட்டுதலின்படியே முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் துலாஸ் அலகபெருமா, சூதாட்ட புகாரில் ஈடுபட்ட மூன்று வீரர்களிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணையை தொடங்கியிருப்பதாகக் கூறினார். விளையாட்டுத்துறையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது குறைந்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தற்போதைய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் யாரும் சூதாட்டப் புகாரில் சிக்க வில்லை என்றும் முன்னாள் வீரர்கள் மூன்று பேரிடம் மட்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்தி வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்துள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்கள் விவரம் குறித்து அமைச்சர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.