பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி விதியை மீறியதால் புனே கிரிக்கெட் ஆடுகள பராமரிப்பாளர் பதவியிலிருந்து பாண்டுரங் சல்கோன்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புனே ஆடுகள பராமரிப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் பாண்டுரங் சல்கோன்கர் பதவி வகித்து வந்தார். நியூசிலாந்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் பி.சி.சி.ஐ-யின் விதியை மீறி நடந்து கொண்டதாக பாண்டுரங் மீது புகார் எழுந்தது.
பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் சூதாட்ட தரகர்கள் என்று கூறி பாண்டுரங்கை சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் செய்தியாளர்கள் என்பதை அறியாமல் பாண்டுரங் ஆடுகளத்தை ஆய்வு செய்ய அனுமதித்துள்ளார். மேலும், வீரர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆடுகளம் அமைத்து தரப்படுமா என்ற கேள்விக்கு பாண்டுரங் கண்டிப்பாக அமைத்து தரப்படும் என பதில் கூறியுள்ளார்.
பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி விதிமுறைகளின் படி ஆடுகள பராமரிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளை தவிர வேறு எந்த நபரும் ஆடுகளத்தை ஆய்வு செய்யக்கூடாது. அந்த விதியை மீறி பாண்டுரங் செயல்பட்டது கேமரா பதிவேட்டின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. அதனை பி.சி.சி.ஐ உறுதி செய்தது.
இந்நிலையில், பாண்டுரங் சல்கோன்கரை பதவி நீக்கம் செய்து பி.சி.சி.ஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் அறிவித்துள்ளார். மேலும், அவருடையை உறுப்பினர் உரிமம் திரும்ப பெறப்பட்டது.