டெஸ்ட் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக ஆதாரங்களை வழங்க வேண்டும் என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி தலைமை செயல் அலுவலர் டேவிட் ரிச்சர்ட்சன் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளிடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் மேட்ச் ஃபிக்ஸிங், ஆடுகளத்தை சாதகப்படி அமைத்தல் உள்ளிட்ட முறைகேடுகள் தாவூத் இப்ராஹிம் கும்பல் மூலம் நடந்ததாக அல்ஜசீரா தொலைக்காட்சி ஸ்டிங் ஆப்ரேஷன் எனப்படும் ரகசிய புலன் விசாரணை மூலம் வெளிக்கொணர்ந்தது.
இந்நிலையில் இந்த புகார்கள் தொடர்பாக ஐசிசி குழு விசாரணை மேற்கொள்ளும். எனவே இதுதொடர்பான அனைத்து விடியோ ஆதாரங்களையும் வழங்க வேண்டும் என அல்ஜசீராவுக்கு ஐசிசி வலியுறுத்தியிருந்தது. ஆனால் தங்கள் எங்கு செய்தி சேகரித்தோம் என்பது தொடர்பான ரகசியம் வெளியாகி விடும் என அத்தொலைக்காட்சி ஆதாரங்களை தர முன்வரவில்லை.
இந்நிலையில் தலைமை செயல் அலுவலர் டேவிட் ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை கூறுகையில் இதுதொடர்பான முழுமையான ஆதாரங்களை தர வேண்டும் என்றார்.

* கத்தாரை சேர்ந்த அல் ஜஸீரா டி.வி. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில் சில டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’, ‘பிட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இந்தியா-இலங்கை (காலே, ஜூலை, 2017-ம்ஆண்டு), இந்தியா-ஆஸ்திரேலியா( ராஞ்சி, மார்ச், 2017), இந்தியா-இங்கிலாந்து (சென்னை, டிசம்பர், 2016) ஆகிய டெஸ்ட் போட்டிகளின் போது ஆடுகள பராமரிப்பாளரை சூதாட்ட தரகர்கள் அணுகி தங்களுக்கு ஏற்ப ஆடுகளத் தன்மையை மாற்றி சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், தங்களது ரகசிய ஆபரேஷனில் இந்த விஷயங்கள் தெரிய வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.
மேலும் சில ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் மோரிஸ், ஆடுகளத்தன்மையை மாற்றுவதற்கான வேலையை செய்ததாகவும் அந்த நிறுவனம் கூறியது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘சூதாட்ட புகார் குறித்து முழுமையான, நியாயமான விசாரணையை நாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம். சூதாட்டம் குறித்து தங்களிடம் உள்ள முழு தகவல்களையும் அல் ஜஸீரா டி.வி. நிறுவனம் கொடுத்து உதவினால் எங்களது விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.