சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டத்தை ஸ்டைலாக ட்வீட் செய்து அறிவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
2023 ஐபிஎல் தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 900+ வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், கேமெரூன் கிரீன், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் மிகப்பெரிய விலைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல சாம் கர்ரன் 18.5 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், க்ரீன் 17.5 கோடிக்கு மும்பை அணிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
அடுத்ததாக ஏலத்திற்கு வந்த சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ், பல அணிகளின் கவனத்தில் இருந்தார். குறிப்பாக லக்னோ, சென்னை, பெங்களூரு, ராஜஸ்தான், ஹைதராபாத் அணி ஆகிய அணிகள் கடுமையாக போட்டிபோட்டதால் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
8 கோடி வரை பெங்களூரு அணி போட்டிபோட்டு பார்த்தது. பின்னர் விலகிக்கொண்டது. 15 கோடி ரூபாய் வரை ஹைதராபாத் அணி போராடி பார்த்தது. கடைசியாக 15 கோடிக்கு மேல் உள்ளே நுழைந்த சிஎஸ்கே அணி 16.25 கோடிக்கு தட்டி தூக்கியது.
பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டவுடன் ரசிகர்கள் ட்விட்டரில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை இரண்டையும் கடைசி வரை போராடி வென்று கொடுத்தார். போட்டியை இறுதி வரை நின்று தோனி போல வெற்றிபெற்று கொடுக்கும் வீரர் என்பதால் இந்த அளவிற்க்கு கொண்டாடப்படுகிறது. சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார்.
ரசிகர்கள் கொண்டாடுவது ஒருபுறம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் ட்விட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டதை மறைமுகமாக கொண்டாடி இருக்கிறார். ஏனெனில் தோனியுடன் விளையாடுவது எவ்வளவு சிறப்பானது என்பதை ஏற்கனவே ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் விளையாடும் போது அவர் உணர்ந்திருப்பார். தற்போது மீண்டும் ஒருமுறை இந்த ஜோடி இணைய உள்ளது. இதை பார்ப்பதற்கு ரசிகர்களும் பேரார்வத்துடன் இருக்கின்றனர்.