தென்ஆப்பிரிக்கா தொடரில் புவனேஷ்வர்குமார் சிறந்த பந்துவீச்சாளராக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகின்ற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றதில்லை. அதனால் இந்த சுற்றுப்பயணம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் சவலான ஒன்றாகும். இந்திய பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் விளையாட சிரமப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும் நடுவருமான ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த ஜவகல் ஸ்ரீநாத், ‘இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவரின் பந்து வீச்சு எதிரணிக்கு சவாலானதாக இருக்கும். கடந்த சில மாதங்களாக புவனேஷ்வர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
பந்தை எவ்வாறு லாவகமாக கையாள்கிறார்கள் என்பதில் தான் வெற்றி பெறுவது உள்ளது. மைதானத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்து வீசினால் எளிதாக வெற்றி பெறலாம். மேலும் இந்திய வீரர்கள் இக்கட்டான சூல்நிலையிலும் சிறப்பாக விளையாடும் திறன் படைத்தவர்கள். அவர்களால் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். அதனால் இந்த சுற்றுப்பயணம் இந்தியாவிற்கு வெற்றிப்பயணமாக அமையும்’ என கூறினார்.