168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் செய்வதற்கு முடிவு செய்தார்.
இந்திய அணிக்கு ராகுல் திரிப்பாதி 44(22) ரன்கள் அடித்து, அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். ஷுப்மன் கில் அரைசதம் கடந்தபின், அசுர வேகத்தில் அதிரடியை துவங்கினார். நடுவில் சூரியகுமார் யாதவ் 24(13) ரன்கள், ஹர்திக் பாண்டியா 30(17) ரன்கள் அடித்து, பங்களிப்பை கொடுத்துவிட்டு அவுட்டாகினர்.
இறுதிவரை களத்தில் நின்ற ஷுப்மன் கில், டி20 போட்டிகளில் முதல் சதத்தை பூர்த்தி செய்து, 123(63) விளாசினார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்தது.
இந்த கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி எனும் சாதனையை படைத்தது.
டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அணிகளுக்கு எதிராக பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றி இதுவாகும். டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலை இங்கு காண்போம்.
1. இந்தியா – 168 ரன்கள் vs நியூசிலாந்து.
2. இந்தியா – 143 ரன்கள் vs அயர்லாந்து.
3. பாகிஸ்தான் – 143 ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ்
4. இங்கிலாந்து – 137 ரன்கள் vs வெஸ்ட் இண்டீஸ்.
ஷுப்மன் கில் படைத்த சாதனைகள்:
நியூசிலாந்து அணிக்கு எதிராக 3வது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார் ஷுப்மன் கில். அவை என்னென்ன என்பதை பின்வருமாறு காண்போம்.
1. இளம் வயதில் டி20 போட்டிகளில் சதமடித்த இந்திய வீரர் என சாதனை படைத்தார்.
2. மூன்றுவித போட்டிகளிலும் சதமடித்த 5வது இந்திய வீரர் ஆவார். மேலும், இதனை இளம் வயதில் செய்த வீரரும் இவரே.
3. ஷுப்மன் கில் அடித்த 126 ரன்கள், டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கொர் ஆகும்.