தில்லியில் தீபாவளிக்கு பின்பு காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. வாகனப் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள், சாலையோர, கட்டடப் பகுதிகளில் உருவாகும் தூசிகள், குப்பைகள் எரிப்பு போன்ற காரணிகளால் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. தற்போது மழை குறைந்து வருவதாலும், வெப்பநிலை குறைந்ததாலும், காற்றில் ஈரப்பதம் அதிகரித்ததாலும் உள்ளூரில் ஏற்படும் காற்று மாசுவால் காற்றின் தரம் மிக மோசமான அளவுக்குச் சென்றுள்ளது.
சமீபத்தில் தில்லியில் நடந்துமுடிந்த இந்தியா – இலங்கை டெஸ்ட் போட்டியின்போது இந்த விவகாரம் மேலும் அதிகக் கவனத்துக்கு ஆளானது.
அந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது மைதானப் பகுதியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்த இலங்கை அணியினர், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தினர். இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது மைதானப் பகுதியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்த இலங்கை அணியினர், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தினர். 12-ஆவது ஓவரை வீசிய சுரங்கா லக்மல், 5 பந்துகளை வீசிவிட்டு களத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து மேத்யூஸ், கேப்டன் சண்டிமல், நடுவர்கள், இலங்கை அணி மேலாளர் அசன்கா குருசின்ஹா, இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஒன்று கூடி கலந்தாலோசித்தனர்.
பின்னர் அந்த ஓவரை தில்ருவன் பெரேரா முடித்து வைத்தார். எனினும், அடுத்த ஓவர் வீசும்போதே இலங்கை அணியில் 10 வீரர்கள் மட்டுமே களத்தில் இருப்பதாகக் கூறி ஆட்டத்தை நிறுத்தினார் சண்டிமல். இதையடுத்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கோலி அறிவித்தார். முன்னதாக, மோசமான காற்றுத் தரம் காரணமாக இலங்கை வீரர் லாஹிரு கமகே மூச்சுவிட சிரமப்பட்டதும், மைதானத்தில் வெளிச்சம் குறைந்து காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நான்காவது நாளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் மற்றும் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகிய இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, தர்மசாலாவில் எளிதாக சுவாசியுங்கள் என்று எழுதியுள்ளார்.
டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், இந்தியா – இலங்கை இடையிலான ஒருநாள் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தர்மசாலாவில் தொடங்குகிறது.