இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெற்ற டி20 தொடருக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உடனடியாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதகாலம் அவரால் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என தெரிவித்தனர்.
டி20 உலக கோப்பையில் இடம்பெற்று இருந்த அவரை உடனடியாக நீக்கியது பிசிசிஐ. பெங்களூரில் உள்ள இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் அவருக்கு குணமடைந்துவிட்டது என இந்திய தேசிய அகடமையில் இருந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பும்ரா உடல்நிலை மீது அவசரம் காட்டவேண்டாம் என இலங்கை அணியுடன் தொடரில் அவர் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் டிசம்பர் கடைசி வாரம் நடத்தப்பட்ட இரண்டாவது பரிசோதனையில் பும்ரா முழுமையாக தேறிவிட்டார் என தெரியவந்தது. ஜனவரி 3ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில்,
“கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எந்தவித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். டி20 உலககோப்பையில் இருந்தும் வெளியேற்றப்பட்டிருந்தார். இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தற்போது முழுமையாக குணமடைந்து விட்டார் என எங்களுக்கு அறிக்கையை கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், அனைத்து-இந்திய சீனியர் தேர்வுக்குழுவினர் கலந்து ஆலோசித்து இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பும்ராவை சேர்த்துள்ளனர்.
இலங்கை ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.