நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நின்றது. அதனையொட்டி நேற்று மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 221 ரன்கள் எடுத்து 18 ரன்களில் தோல்வியை தழுவியது. அத்துடன் உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி முற்றிலுமாக வெளியேறியது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “முதலில் எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இந்தத் தொடரில் ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு மிகவும் சிறப்பானது. தற்போது உங்களைபோல் நாங்களும் வருத்தத்துடன் இருக்கிறோம். எனினும் நேற்றைய போட்டியில் வெற்றிப்பெற எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்தோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, “எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், எங்கள் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் ஆகியவர்களுக்கு எனது நன்றி. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்தோம்” எனத் தெரிவித்தார்.
A big thank you to all my team members, our coaches, support staff, our families and most importantly to all the undying support from all of you! We gave it everything we had! ?? pic.twitter.com/nXp9GmWhIK
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) July 11, 2019
இந்நிலையில் ஜடேஜா, தனது கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
’’ஒவ்வொரு முறையும் கீழே விழும்போது, சிறப்பாக எழுந்து நிற்க, இந்த விளையாட்டு எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. எனக்கு தூண்டுகோலாக இருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் நன்றி மட்டுமே போதுமானதில்லை. உங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து உத்வேகம் கொடுங்கள். கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை அளிப்பேன். அனைவருக்கும் அன்பு’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி,“தோனி தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக இறங்கியிருந்தால், அவர் ரிஷப் பந்த்திற்கு உரிய ஆலோசனை வழங்கியிருப்பார். அத்துடன் அவரை நிதானமாக ஆட வலியுறுத்தியிருப்பார். மேலும் அவர் வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்கும் படி அறிவுரை வழங்கியிருந்திருப்பார். தோனி அந்த நேரத்தில் களத்தில் இருந்திருந்தால், விக்கெட் சரிவையும் தடுத்திருப்பார். அத்துடன் தோனி தனது அனுபவத்தை பயன்படுத்தி நிலைமையை அறிந்து விளையாடி இருப்பார். எனவே தோனியை ஏழாவது இடத்தில் களமிறக்கியது மிகப் பெரிய தவறு” எனத் தெரிவித்துள்ளார்.