இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து தொடங்கிய ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று 2க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மயங்க் அகர்வால், விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிருத்வி ஷா 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராகுல், 113 பந்துகளில் 112 ரன்கள் எடுத்த நிலையிலும், ஸ்ரேயாஸ் ஐயர், 63 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
மனிஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்த நிலையில் பெனட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தாக்கூர், ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது.
இந்திய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியை நியூசிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுவதுமாக நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து.
இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் பேசியதாவது…
இது மிகப்பெரிய தோல்வி அல்ல. ரன்கள் காட்டும் அளவிற்கான அவ்வளவு பெரிய தோல்வியாக நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் பந்து வீச்சிலும் பீல்டிங்கில் சொதப்பி விட்டோம். இந்த தொடரில் நாங்கள் வெல்வதற்கான தகுதி எங்களிடம் இல்லை . மிகவும் மோசமாக விளையாடினோம், வரும் வாய்ப்புகளைத் தவற விட்டோம் . நியூசிலாந்து அணி எங்களை விட மிகவும் நுணுக்கமாக ஆடினார்கள் . மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற அவர்களுக்கு தகுதி இருக்கிறது. தற்போது டெஸ்ட் தொடருக்காக காத்திருக்கிறோம். அணி நன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது சரியான மனநிலையில் சென்றால் டெஸ்ட் தொடரிலும் வெல்லலாம் இவ்வாறு கூறினார் விராட் கோலி.