இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இங்கிலாந்து மற்றும் வேல்சில் வரும் 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, இந்த சுற்றுப்பயணம் இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு தொடரை ஒத்திவைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அநேகமாக இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளுடன் டி20 போட்டிகளும் இடம்பெற உள்ளன. அத்துடன் மூன்று நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி போட்டியையும் சேர்க்கும்படி பிசிசிஐ கூறியுள்ளது.
எனவே, இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்ப, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்க உள்ள கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும். வரும் 13-ம் தேதி நடைபெற உள்ள நிர்வாகிகள் கூட்டத்தில், இந்திய அணியின் சுற்றுப்பயண நாட்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்கள் இறுதி செய்யப்படும் என தெரிகிறது
மேலும்,
இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30 முதல் நடைபெற உள்ள உலககோப்பையில் பங்குபெறும் 10 நாடுகளை சேர்ந்த 150 கிரிக்கெட் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள அணியில் மாற்றங்களை செய்ய மே 23-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட பெயர்களில் சில ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன.
இந்த நிலையில் தகுதியும், திறமையும் இருந்தும், சில காரணங்களாலும், அதிர்ஷ்டம் இல்லாமலும் உலககோப்பை அணிகளில் இடம்பெறாத 11 வீரர்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.) .
நீரோஷன் டிக்வெல்லா (இலங்கை), அம்பதி ராயுடு (இந்தியா), ரிஷாப் பண்ட் (இந்தியா), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (ஆஸ்திரேலியா), தினேஷ் சன்டிமால் (இலங்கை), கியரோன் பொல்லார்டு (வெஸ்ட் இண்டீஸ்), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), ஆசிப் அலி (பாகிஸ்தான்), ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து), அகிலா தனன்ஜயா (இலங்கை), முகமது அமீர் (பாகிஸ்தான்).