முதல்தர போட்டியில் 12 இரட்டை சதங்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா பெற்றுள்ளார்.
ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் புஜாரா விளையாடும் சவுராஷ்டிரா அணியும், ஜார்க்கண்ட் அணியும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் உத்தப்பா (13), பட்டேல் (20) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு துணையாக சிராக் ஜானியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
புஜாரா சதத்தால் சவுராஷ்டிரா முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் குவித்திருந்தது. புஜாரா 125 ரன்களுடனும், ஜானி 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். சதம் அடித்த ஜானி 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். புஜாரா இரட்டை சதத்தால் சவுராஷ்டிரா 2-வது நாள் மதிய தேனீர் இடைவேளை வரை 9 விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் குவித்துள்ளது.
இந்த இரட்டை சதம் மூலம் புஜாரா முதல்தர போட்டிகளில் 12 இரட்டை சதம் அடித்துள்ளார். முதல்தர போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
விஜய் மெர்சன்ட், விஜய் ஹசாரே, ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோரும் அதிக அளவில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
முதல் தரப் போட்டியில் அதிக இரட்டை சதங்கள் அடித்துள்ள இந்திய வீரர்கள் பட்டியல் :
- செட்டேஸ்வர் புஜாரா – 12 இரட்டை சதம்
- விஜய் மெர்சன்ட் – 11 இரட்டை சதம்
- விஜய் ஹசாரே – 10 இரட்டை சதம்
- சுனில் கவாஸ்கர் – 10 இரட்டை சதம்
- ராகுல் ட்ராவிட் – 10 இரட்டை சதம்