இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் தொடர்ந்து தடம் பதித்து வரும் செடேஷ்வர் புஜாராவுக்கு இந்த முறை குளொஸ்டர்ஷயர் அணி வாய்ப்பளித்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த குளொஸ்டர்ஷயர் கிரிக்கெட் கவுன்ட்டி அணிக்கு 1995-ல் ஜவகல் ஸ்ரீநாத் ஆடினார், மே.இ.தீவுகளின் பவுலிங் மேதை கார்ட்னி வால்ஷின் பரிந்துரையின் பேரில் 1995-ல் ஸ்ரீநாத் அங்கு ஆடினார், அதன் பிறகு 2வதாக இதே கிளப்புக்கு ஆடும் இந்திய வீரரானார் செடேஷ்வர் புஜாரா.

குளோஸ்டர்ஷயர் 2005-க்குப் பிறகு டிவிஷன் 1-ல் இந்த ஆண்டு ஆடவிருக்கிறது. புஜாரா இதுவரை இங்கிலாந்து கவுண்ட்டியில் டெர்பி ஷயர் (2014), யார்க் ஷயர் (2015 மற்றும் 2018), நாட்டிங்கம் ஷயர் (2017) ஆகிய அணிகளுக்காக ஆடி பெயர் பெற்றார்.
குளொஸ்டர் ஷயர் அணிக்காக புஜாரா ஏப்ரல் 12ம் தேதி முதல் போட்டியில் ஹெடிங்லே மைதானத்தில் யார்க் ஷயருக்கு எதிராக ஆடவிருக்கிறார்.
இது தொடர்பாக புஜாரா கூறும்போது, “எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியமைக்காக இந்த கிளப்புக்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். கவுண்ட்டி கிரிக்கெட் ஆடுவதை நான் மகிழ்வுடன் செய்து வருகிறேன்.

தொடர்ந்து என் ஆட்டத்தில் மேம்பாடு காண இந்த கிரிக்கெட் உதவுகிறது” என்றார்.
ஆனால் புஜாராவின் கவுண்ட்டி கிரிக்கெட் சராசரி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது வேறு விஷயம், 36 இன்னிங்ஸ்களில் 29.93 தான் புஜாராவின் சராசரி. மேலும் 2018-ல் 6 போட்டிகளில் யார்க் ஷயருக்காக ஆடும்போது ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.வ்