கனடாவில் நடந்த டி 20 தொடரில் கிறிஸ் கெயில் ஒரு கையில் அட்டகாசமாக கேட்ச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டின் யூனிவர்ஸல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி 20 தொடரில் தற்போது விளையாடி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் வான்கூவர் நைட்ஸ் – மேற்கிந்தியத் தீவுகள் பி அணிகள் மோதின. இதில் கிறிஸ் கெயில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக களமிறங்கினார். முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 17.4 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த ஆட்டத்தின் 14-வது ஓவரில் கிறிஸ் கெயில் பிரம்மிக்கத்தகுந்த வகையில் கேட்ச் செய்து அனைவரையும் வியக்கவைத்தார். சுழற்பந்து வீச்சாளர் பவாத் அகமது வீசிய பந்தை கவம் ஹாட்ஜ் சிலிப் திசையில் தட்டிவிட முயன்றார். அப்போது அங்கு பீல்டிங் செய்த கிறிஸ் கெயில் தனது இடதுபுறம் பாய்ந்து பந்தை பிடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது இடது கையில் பட்டு நழுவியது. அப்போது நொடிப் பொழுதில் அந்தரத்தில் இருந்த பந்தை வலது கையால் பிடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார் கெயில்.
கெயிலின் இந்த மேஜிக்கை பார்த்த சக அணி வீரர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அதேவேளையில் பேட்ஸ்மேனும், ரசிகர்களும் பிரம்மித்தனர்.
கெயில் செய்த இந்த அற்புதமான கேட்ச் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வான்கூவர் நைட்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. பேட்டிங்கில் கிறிஸ் கெயில் வெறும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார்