திருநெல்வேலியில் டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என சமூக ஆர்வலர் முத்துராமன், சங்கர் நகர் சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அதன் நிர்வாகம், சங்கர் நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டம்-2017-ன்படி பிணையத் தொகையும் செலுத்தவில்லை. எனவே, சங்கர் நகரில் டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முத்துராமன் கூறியது: “ஒரு போட்டிக்கு டிக்கெட் வசூலிக்கும்போது, போட்டியை நடத்துபவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு கேளிக்கை வரி செலுத்த வேண்டும். இதையொட்டி, நான் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் போட்டி ஏற்பாட்டாளருக்கு நோட்டீஸ் அனுப்புவதாக செயல் அலுவலர் உறுதியளித்துள்ளார். ஒருவேளை அவர் நோட்டீஸ் அனுப்பாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவது குறித்து சிந்திப்பேன்’ என்றார்.
இது தொடர்பாக டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் கேட்டபோது, “போட்டி நடத்துவது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே சங்கர் நகர் பேரூராட்சிக்கு தெரிவித்துவிட்டோம். ஆனால், அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பேரூராட்சி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேளிக்கை வரியைப் பொருத்தவரையில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையானால், நாங்கள் சுமார் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் செலுத்த வேண்டும். எனவே, டிக்கெட் விற்பனையின் அடிப்படையில் பேரூராட்சிக்கு கேளிக்கை வரி செலுத்தப்படும்’ என்றனர்.

3-ஆவது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி திருநெல்வேலியில் புதன்கிழமை தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், திருநெல்வேலியில் 14 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.