கொரோனா பிடியில் இருந்து விளையாட்டு உலகம் மெல்ல மீண்டு வருகிறது. போட்டிகளுக்கு தயாராவதற்காக, 55 வீரர்களை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) தேர்வு செய்துள்ளது. இதில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 37, இடம் பெற்றுள்ளார்.
கடைசியாக கடந்த ஜனவரி மாதம் விளையாடிய இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயத்தால் பாதியில் விலகினார். தற்போது பூரண குணமடைந்துள்ள இவர், பயிற்சியை துவக்கினார்.
ஆண்டர்சன் கூறியது:
கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக போட்டியில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்ததன்மூலம், எனது கிரிக்கெட் வாழ்க்கை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். மீண்டும் பயிற்சியை துவக்கியதில் மகிழ்ச்சி. விரைவில் போட்டிகள் துவங்கிவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
எனது கிரிக்கெட் உபகரணங்களை கொண்டு தான் பயிற்சியில் ஈடுபடுகிறேன். ஒரு சில ஓவர்கள் மட்டும் பந்துவீசுகிறேன். பின், நேராக காரில் வீட்டுக்கு செல்கிறேன். முழு உடற்தகுதியுடன் இருப்பதால் விளையாட தயாராக இருக்கிறேன். வரும் ஜூலை 8ல் விண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.
கொரோனாவுக்குப் பின் இங்கிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் ஜூலை மாதம் துவங்குகிறது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. தற்போது இங்கிலாந்து செல்லும் விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இம்மாதம் நடக்க இருந்த இத்தொடரின் முதல் டெஸ்ட், வரும் ஜூலை 8ம் தேதி ஏஜஸ் பவுல் மைதானத்தில் துவங்குகிறது.
கொரோனா பிரச்னைக்குப் பின் நடக்கவுள்ள முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது. இதைப் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. அடுத்த இரு டெஸ்ட் போட்டிகள் ஜூலை 16, 24ல் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும்.
வீரர்கள் நலன் கருதி, அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஏஜஸ் பவுல், ஓல்டு டிரபோர்டு என இரு மைதானங்கள் மட்டும் இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.