சவாலான தென் ஆப்பிரிக்கா தொடருக்கு இந்திய அணி புறப்படவிருக்கிறது. 3 டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள், 3 டி20 என்று மிக நீண்ட தொடருக்கு இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அயல்நாடுகளில் பயணம் மேற்கொண்டு கடினமான போட்டிகளில் ஆடவுள்ளதன் சவால்கள் பற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினர்.
விராட் கோலி கூறியதாவது:
பந்து வீச்சு, பேட்டிங் இரண்டுமே நீண்ட தொலைவு வந்து விட்டன. கடந்த முறையை விட இப்போது நல்ல முறையில் ஆட விரும்புகிறோம். மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்வது எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு. இம்முறை இன்னும் சிறப்பாக ஆட முயற்சி செய்வோம்.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்குச் செல்லும் போது சவால்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அடிக்கடி இங்கு நாம் செல்வதில்லை எனவே இந்தப் பயணங்களை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும்.
நான் என் வாழ்க்கியின் முக்கிய தருணத்துக்காக (திருமணம்) கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தேன், மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவது கடினமல்ல. தென் ஆப்பிரிக்கா தொடர் என் மனதில் இருந்து கொண்டுதான் இருந்தது, அதற்காக பயிற்சியை மேற்கொண்டும் இருந்தேன்.
முன்னதாக விராத் கோலி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘திருமணம் முடிந்த கையோடு அணிக்கு திரும்பியிருக்கிறேன். திருமணமும் முக்கியம். மூன்று வாரங்களாக கிரிக்கெட் விளையாடாமல் அணிக்குத் திரும்பி இருப்பது பற்றி கேட்கிறார்கள். இதில் எனக்கு கஷ்டம் ஏதும் இல்லை. ஏனென்றால் கிரிக்கெட் என் ரத்தத்தில் ஊறியது.
தென் ஆப்பிரிக்கா சூழல்கள் கடும் சவால்களை அளிக்கக் கூடியவை, இந்த ஒன்றரை ஆண்டு அயல்நாட்டுப் பயணங்கள் இந்த இந்திய அணியின் திறமைகளை விளக்குவதாக அமையும், இது ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும். பேட்ஸ்மென்களின் மனநிலையைப் பொறுத்தது அனைத்தும்.
நல்ல மனநிலையில் இல்லை எனில் எந்த ஒரு சூழலும் நமக்கு எதிராக திரும்பும். மனத்தளவில் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அப்படித் தயாராகிவிட்டால் அனைத்துமே உள்நாட்டு சூழல் போலவே தெரியும்.
எங்களைப் பொறுத்தவரை நாட்டுக்காக ஆடுவது மிக மிக பெருமைக்குரியது. அணியாகத் திரண்டு ஆடவேண்டுமென்பதை அறிந்துள்ளோம். சவாலான சூழலில் நன்றாகச் செயல்பட்டாலே நமக்கு அது பணித் திருப்தியைக் அளிக்கும். வெற்றி பெறுவதுதான் திருப்தி தரும்.
நம் அணியின் திறமை மீதான நம்பிக்கையில் எனக்கு சற்றும் குறைவில்லை. அதே போல் அணியினரின் பணி தீவிரம் நோக்கம் பற்றியும் எனக்கு சந்தேகமேயில்லை. சரியான பாதையில்தான் பயணிக்கிறோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி