இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பேன்: மிட்செல் சான்ட்னெர் பேட்டி

‘ரன் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்க முயற்சிப்பேன்’ என்று நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் கூறினார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணிக்கு எதிராக பந்து வீசுவது என்பது கடினமான விஷயமாகும். சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடுவதில் இந்திய வீரர்கள் கில்லாடிகள். சுழற்பந்து வீச்சை விளையாடியே அவர்கள் வளர்ந்தவர்கள். பந்தை வேகமாக வீசி பேட்ஸ்மேன்களை தவறு இழைக்க வைக்க முயற்சிப்பேன். டாட்-பால்களை (ரன் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசுவது) வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தால் சில விக்கெட்டுகளை பெற முடியும் என்று நம்புகிறேன். அந்த திட்டத்தை செயல்படுத்த நான் முயற்சி மேற்கொள்வேன்.

விராட்கோலியை கட்டுப்படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அவர் மிகச்சிறந்த வீரர். இந்திய அணியில் நிறைய சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல பார்மில் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்கள் விளையாடிய விதம் மிகவும் சிறப்பானது. கடந்த முறை இங்கு நாங்கள் நன்றாக செயல்பட்டோம். இந்த முறை நாங்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றுவோம் என்று நம்புகிறேன்.

கடந்த காலங்களில் இங்கு பந்து வீசிய அனுபவம் இந்த போட்டி தொடருக்கு உதவிகரமாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்திய மண்ணில் அதிகம் பந்து வீசிய அனுபவஸ்தரான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்று இருக்கிறேன். நான் அதிசயிக்கத்தக்க வகையில் பந்து வீச முயற்சிக்க போவதில்லை. பேட்ஸ்மேன்கள் தவறு இழைக்க தூண்டும் வகையில் பந்து வீச முயற்சி செய்வேன்.

சுழற்பந்து வீச்சாளர்கள் அக்‌ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பந்து வீச்சு வீடியோ பதிவுகளை பார்த்து இருக்கிறேன். அவர்கள் சரியான இடத்தில் நிலையாக பந்து வீச முயற்சிக்கிறார்கள். அதேபோல் நானும் பந்து வீசி பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட் ஆட தூண்டி விக்கெட் எடுக்க முயற்சிப்பேன். ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக அடித்து ஆடக்கூடியவர். அவர் ஆடம் ஜம்பா வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சர் அடித்த விதத்தை நான் பார்த்தேன். அவரை எதிர்கொள்வதில் எச்சரிக்கையாக செயல்படுவோம். இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். சில ‘டாட்’ பந்துகளை வீசி ஒரு ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.

கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான் வேகமாக பந்து வீசினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதனை போல் இந்த தொடரிலும் முயற்சி செய்து பார்ப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.