இரண்டு அண்டர்-19 உலகக்கோப்பை பைனல் ஹீரோக்களான ஷேக் ரஷீத், நிஷந்த் சிந்து இருவரையும் வாங்கியது சிஎஸ்கே அணி.
கொச்சியில் நடைபெற்று வரும் 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் பங்கேற்று தீவிர வீரர்கள் வேட்டையில் இறங்கின. இதில் கவனிக்கப்படும் விதமாக சாம் கர்ரன் 18.5 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், கேமரூன் கிரீன் 17.5 கோடிக்கு மும்பை அணிக்கு எடுக்கப்பட்டனர்.
அடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். 50 லட்சத்திற்கு ரகானே எடுக்கப்பட்டார். அத்துடன் இளம் வீரர்கள் இரண்டு பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் ஒருவராக இருப்பவர் ஷேக் ரஷீத், 19 வயதான இவர் அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். நிலைத்து நின்று ஆடக்கூடிய வீரர் மற்றும் வேகப்பந்துவீச்சு, சுழல் பந்துவீச்சு இரண்டையும் நன்றாக எதிர்கொள்ளும் வீரராகவும் இருக்கிறார். நிதானமாக விளையாடி வரும் இவர் தேவையான நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்துகிறார் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவனம் வைத்து இவரை எடுத்திருக்கிறது.
மற்றொரு அண்டர்-19 வீரர் நிஷாந்த் சிந்து ஆரம்ப விலை 20 லட்சத்திலிருந்து 60 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் பேட்டிங் மற்றும் சுழல்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். இவரும் உலகக்கோப்பை இறுதி போட்டியில் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். சுழல் பந்துவீச்சிலும் அசத்தினார் என்பதால் இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 60 லட்சத்திற்கு எடுத்திருக்கிறது.
மொத்தமாக இந்த நான்கு வீரர்களை தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்திருக்கிறது. சென்னை அணியிடம் இன்னும் 1.90 கோடி ரூபாய் மீதம் இருக்கிறது. ஒருவேக பந்துவீச்சாளர் மற்றும் ஒரு இளம் பேட்ஸ்மேன் சென்னை அணிக்கு தேவை இருக்கிறது. யாரை எடுப்பார்கள் என்பதை பார்ப்போம்.