பாகிஸ்தானுக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டைக் கொண்டு வந்ததற்கு முக்கியப் பங்களிப்புச் செய்த மே.இ.தீவுகள் வீரருக்கு கவுரவக் குடியுரிமையும், குடிமகனுக்கான உயர்ந்த விருதையும் வழங்கி அந்நாட்டு அரசு கவுரவிக்க உள்ளது.
மே.இ.தீவுகள் அணி வீரர் டேரன் சமிக்கு கவுரவக் குடியுரிமையும், நிஷான் இ ஹைதர் எனும் உயர்ந்த விருதும் வழங்கப்பட உள்ளது. இஸ்லாமாபாத்தில் மார்ச் 23-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த விருதை டேரன் சமிக்கு அதிபர் ஆரிப் அல்வி வழங்குகிறார்.
பாகிஸ்தானில் நடந்துவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாக டேரன் சமி இருந்து வருகிறார்.
பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல், குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பின் எந்த நாட்டு வீரரும் அங்கு கிரிக்கெட் விளையாட மறுத்து வந்தனர். இந்த சூழலில் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் தொடங்கப்பட்டதும் அதில் மே.இ.தீவுகள் வீரர் டேரன் சமி இணைந்து விளையாடினார். இதுவரை தொடர்ந்து 5 சீசன்களாக டேரன் சமி விளையாடி வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு லாகூரில் பிஎஸ்எல் டி20 போட்டி நடந்தபோது, அதில் பங்கேற்க டேரன் சமி சம்மதம் தெரிவித்தார். பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் அங்கு வர மறுத்துவிட்டநிலையில் டேரன் சமி தொடர்ந்து அனைத்து சீசன்களிலும் விளையாடினார்.
பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாகவும் டேரன் சமி நியமிக்கப்பட்டு 2-வது ஆண்டே கோப்பையை வென்று கொடுத்தார்.
இதையடுத்து, பெஷாவர் ஜால்மி அணியின் உரிமையாளர் ஜாவித் அப்ரிதி, அந்நாட்டு அதிபருக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதில், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குச் செய்த சேவைக்கும், மீண்டும் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறுவதில் முக்கியப் பங்காற்றிய மே.இ.தீவுகள் வீரர் டேரன் சமிக்கு கவுரவக் குடியுரிமை, விருது வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்தார். இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த விருது டேரன் சமிக்கு வழங்கப்பட உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டேரன் சமி மிகவும் புகழ்வாய்ந்தவராக மாறியுள்ளார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன், தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்சலே கிப்ஸ் ஆகியோருக்கு 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை முடிந்த பின் கரிபீயன் தீவுகளில் இருக்கும் செயின்ட் அரசு கவுரவக் குடியுரிமை வழங்கி இருந்தது. இப்போது மூன்றவதாக டேரன் சமிக்கு பாகிஸ்தான் அரசு கவுரவக் குடியுரிமை வழங்க உள்ளது.