நாட்டிங்காமில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்காள தேசத்தை 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 381 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 147 பந்தில் 166 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரி, 5 சிக்கர்கள் அடங்கும்.
வங்காள தேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டேவிட் வார்னர் அடித்தது அவரது 16-வது சதமாகும். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார்.

இருவரும் 3-வது இடத்தில் உள்ளனர். 29 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மார்க் வாக்கும் (18 சதம்) உள்ளனர்.
டேவிட் வார்னர் 112-வது இன்னிங்சில் 16-வது சதத்தை தொட்டார். இந்திய கேப்டன் விராட் கோலி தனது 16-வது சதத்தை 116-வது இன்னிங்சில்தான் அடித்தார். ஒட்டு மொத்தமாக டேவிட் வார்னர் 14-வது இடத்தில் உள்ளார்.
இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார் டேவிட் வார்னர்
பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக 10 பந்துகளில் 32 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து ஸ்டாய்னிஸ் களம் காண, மறுமுனையில் கவாஜா 10 பவுண்டரிகள் உள்பட 89 ரன்களுக்கு அவுட்டானார். கடைசி விக்கெட்டாக ஸ்டீவன் ஸ்மித் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
49 ஓவர்கள் முடிவில் மழையால் ஆட்டம் சற்று தடைப்பட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. உலகக் கோப்பை போட்டியில் இது ஆஸ்திரேலியாவின் 2-ஆவது அதிகபட்ச ஸ்கோராகும்.
ஸ்டாய்னிஸ் 17, அலெக்ஸ் கேரி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச தரப்பில் செளம்யா சர்கார் 3, முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் 1 விக்கெட் சாய்த்தனர்.

இதையடுத்து 382 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய வங்கதேச அணியில், தொடக்க வீரர் தமிம் இக்பால் 62 ரன்கள் சேர்க்க, உடன் ஆடிய செளம்யா சர்கார் 10 ரன்களுக்கு வீழ்ந்தார்.
பின்னர் வந்தவர்களில் ஷகிப் அல்ஹசன் 41 ரன்கள் அடிக்க, முஷ்ஃபிகர் ரஹிம் மட்டும் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 102 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மறுமுனையில் லிட்டன் தாஸ் 20, மஹமுதுல்லா 69 ரன்கள் சேர்த்தனர். சபீர் ரஹ்மான் டக் அவுட்டாக, மெஹதி ஹசன், கேப்டன் மோர்டாஸா தலா 6 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர்.
இறுதியாக 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்தது வங்கதேசம். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 2, கோல்டர் நீல் 2, ஸ்டாய்னிஸ் 2, ஸம்பா 1 விக்கெட் வீழ்த்தினர்.