தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் குவாலிபையர்-2 போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக
டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி 14.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது பிரிந்தது. ஜெகதீசன் 48 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஹரி நிஷாந்த் 46 பந்தில் 51 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அவரை தொடர்ந்து முகமது மற்றும் சதுர்வேத் அதிரடி ஆட்டம் ஆடினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 18 மற்றும் 19-வது ஓவர்களில் தலா இரண்டு சிக்சர்கள் விளாசினர். 13 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் விளாசிய சதுர்வேத் 19-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் முகமது ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 16 ரன்கள் விளாச, திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. முகமது 9 பந்தில் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அதன்பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சரத் ராஜ் அதிரடியாக ஆடி 32 ரன்னில் அவுட்டானார்.

மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஜெகதீசன் கவுசிக் அதிகபட்சமாக 32 பந்தில் 3 சிக்சருடன் 40 ரன்கள் அடித்து வெளியேறினார்.
இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஒவரில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
திண்டுக்கல் அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், மோகன் அபினவ், ரோகித் ஆகியோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நாளை மறுதினம் சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொள்கிறது.