டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிக்கான ஏலங்கள் நிறைவடைந்து, அனைத்து அணிகளும் தங்கள் அடுத்தகட்ட பணிகளை தொடங்கியுள்ளன. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணி பயிற்சியாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே பயிற்சியாளர்கள் தேர்வு பணியை தொடங்கிய டெல்லி அணி, ராகுல் டிராவிட்டை அணியின் பயிற்சியாளராக நியமிக்க விரும்பியது.

ஆனால் அவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக உள்ளதால், டெல்லி அணிக்கு பயிற்சியாளராக தேர்வாக முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டிராவிட்டை அணியின் ஆலோசகராக நியமித்த டெல்லி அணி, பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தது.
இந்நிலையில் டெல்லி அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை டெல்லி அணியின் சிஇஓ ஹேமந்த் டுவா உறுதி செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் சுமார் 15 வருட அனுபவமுடைய ஜேம்ஸ், 84 ஒருநாள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியை பொறுத்தவரையில் டெல்லி உட்பட மூன்று அணிகளில் இவர் விளையாடியுள்ளார். இவரை தவிர, முன்னாள் அஸ்ஸாம் அணியின் ரயில்வே கிரிக்கெட்டர் சுபாதீப் கோஸ் டெல்லி அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமணம் செய்யப்பட்டுள்ளார்.