ஏற்கனவே வேதனையில் இருக்கும் இலங்கை அணிக்கு மேலும் ஒரு சோதனை
வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் இடையேயான முத்தரப்பு தொடரில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசல் பெரேரா காயம் காரணமாக விலகியுள்ளார்.
செல்லும் இடம் எல்லாம் படுதோல்வி அடைந்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதிலும் ஜிம்பாப்வே அணியிடம் மண்ணை கவ்வி தனது நாட்டு ரசிகர்களிடமே வெறுப்பை சம்பாதித்தது.
இந்நிலையில் ஏற்கனவே தொடர் தோல்விகளில் சிக்கி தவித்து வரும் இலங்கை அணிக்கு மேலும் ஒரு சோதனையாக அந்த அணியின் நட்சத்திர வீரரான குசல் பெரேரா காயம் காரணமாக இந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிம்பாப்வே அணியுடனான போட்டியின் போது காயமடைந்த குசால் பெரேராவிற்கு, நிச்சயம் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியன் பேரிலேயே குசல் பெரேரா இந்த தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு இலங்கை அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த தனன்ஜெய டி சில்வாவிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை அணியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ள தனன்ஜெய டி சில்வா, இலங்கை அணிக்காக இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்த முத்தரப்பு தொடரிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வரும் இலங்கை அணியில் இருந்து தற்போது குசால் பெரேரா விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.