ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, தோனியின் அனுபவம் ஆகியவற்றை உலகக்கோப்பையில் உத்தி வகுப்புக்காகப் பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளேடு ஒன்றிற்கு கோலி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கிரிக்கெட்டில் தோனி மிகவும் சாதுரியமான வீரர்களில் ஒருவர், விக்கெட் கீப்பிங்கில் விலைமதிக்க முடியாதவர். இதனால்தான் நான் என் இஷ்டப்படி சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது. தோனி அனுபவச் செல்வம்.
என் கிரிக்கெட் வாழ்க்கை தோனியின் கீழ்தான் தொடங்கியது, அவரை நெருக்கமாக சிலர் அவதானித்துள்ளனர், நானும் கூடத்தான். அவரைப்பொறுத்தவரை அணிதான் மற்ற எல்லாவற்றையும் விட மேல், என்னவாக இருந்தாலும் அணிக்குத்தான் அவர் முன்னுரிமை அளிப்பார். அவரது அனுபவம் நமக்கு பெரிய வரப்பிரசாதம்.
ஐபிஎல் போட்டிகள் உட்பட விக்கெட் கீப்பராக அவர் அவுட் ஆக்குவது ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியதாக இருப்பதைப் பார்த்தோம்.
ஐபிஎல் தொடரில் தோனி, ரோஹித் சர்மா இருவரும் தங்கள் பணியைச் செவ்வனே செய்த விதம், குறிப்பாக கேப்டன்களாக அவர்கள் இருவரும் அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை பக்கம் பக்கமாக பேசுகிறது. ஆகவே இருவரையும் தலைமைப்பணியில் ஈடுபடுத்துவது அபாரமாக இருக்கும்
அதனால்தான் அணி நிர்வாகம், வரும் உலகக்கோப்பையில் உத்தி வகுப்பு குழு ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளது அதில் தோனி, ரோஹித் அங்கம் வகிப்பார்கள்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
கோலியின் ஐபிஎல் கேப்டன்சி ரெக்கார்டை இந்திய அணியுடன் ஒப்பிடாதீர்கள் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சில மோசமான ஆட்டத்தால் கடைசி இடத்தையே பிடித்தது. இதில் அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்சி குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் உலககோப்பைக்கு தலைமை தாங்க் கோலிக்கு போதிய திறமை இல்லை என்று விமர்சித்தனர்.
இந்த நிலையில் கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கங்குலி கூறியதாவது,”
கோலியின் ஐபிஎல் கேப்டன்சி ரெக்கார்டை இந்திய அணியுடன் ஒப்பிடாதீர்கள். இந்திய அணிக்கு அவர் சிறப்பாக கேப்டன்சி செய்திருக்கிறார். உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா முக்கிய பங்கு வகிக்க போகிறார். அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.