’நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில், சவாலான ‘நம்பர்-4’ இடத்தில் களமிறங்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி வரும் 22ம் தேதி துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில், தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.
சமீபகாலமாக உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய காரணத்தினால் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேன் இடம் காலியாக உள்ளது.
இந்த இடத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 6 வீரர்களை இந்திய கேப்டன் விராட் கோலி களமிறக்கி சோதித்தார். ஆனால் யாராலும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்டிய ஒரு சில போட்டிகளில் நான்காவது வீரராக களமிறங்கி அசத்தினார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தன்னால் அந்த இடத்தில் சாதிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,’ நான்காவது பேட்ஸ்மேன் இடத்தில் என்னால் சாதிக்க முடியும் என நம்புகிறேன். இதை ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலும் நிரூபித்துள்ளேன். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், தேர்வாளர்கள் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்தனர். அதனால் நான் எனது வாய்ப்புக்காக காத்திருந்தேன். இந்த வாய்ப்பை நிச்சயம் தக்க வைத்துக்கொள்வேன்.’ என்றார்.