பாய்ஸ் இது உங்க கேமே கிடையாது.. அடுத்த டி20ல நீங்க யாருன்னு காட்டுங்க அந்த இலங்கை பசங்களுக்கு – தினேஷ் கார்த்திக் கெத்தாக பேச்சு!

இலங்கை-க்கு எதிராக தடுப்பாட்டம் ஆடாமல், நம்ம அதிரடியை காட்டுங்க என்று அறிவுறுத்தியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

இந்திய அணி, இலங்கை அணியுடன் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் படுமோசமாக செயல்பட்டது. பவுலிங்கில் பவர்-பிளே ஓவர்களில் ரன்களை நிறைய விட்டுக்கொடுத்தனர். அதேபோல் பேட்டிங்கிலும் நல்ல துவக்கம் அமையவில்லை.

வழக்கமாக, பவர்-பிளேவில் நிதானத்தை வெளிப்படுத்திவிட்டு மெதுவாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய அணி, இரண்டாவது டி20 போட்டியில் தடுப்பாட்டம் மட்டுமே விளையாடியது. இது வழக்கமான இந்திய அணியின் அணுகுமுறையே இல்லை என்பதை சுட்டிக்காட்டி கடுமையாக பேசியதோடு மட்டுமல்லாமல், அடுத்த போட்டியில் நாம் யார்? நமது அதிரடி என்ன? என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று பேட்டியில் பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக். அவர் கூறியதாவது:

“இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20ல் இந்திய அணி தங்களது வழக்கமான ஆட்டத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். பவுலர்கள் துவக்கத்தில் நிறைய ரன்களை வாரிக்கொடுக்கிறார்கள். அதேபோல் பேட்ஸ்மேன்கள் பட்டு பட்டென்று ஆட்டம் இழந்து போய் விடுகிறார்கள். இறுதியில் போட்டியையும் இழந்துவிட்டார்கள்.

துவக்கத்தில் அதிரடியாக விளையாடிவிட்டு மிடில் ஓவர்களில் நிதானம் காட்டுவார்கள். பின்னர் இறுதிக்கட்ட ஓவர்களில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பதிவு செய்வார்கள். ஆனால் இரண்டாவது டி20 போட்டியில் அப்படி நடக்காமல் போனது, அணுகுமுறையில் இருந்து மாறிவிட்டனர் என தெரிந்தது.

இந்திய அணி புதிய அணுகுமுறையில் இறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். துவக்கத்தில் அதிரடியை வெளிப்படுத்தி எதிரணியை கதிகலங்க செய்ய வேண்டும். பின்னர் மிடில் ஓவர்களில் விக்கட் இழக்காமல் நங்கூரம் போல நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டு, இறுதி சில ஓவர்களுக்கு பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

அதன் பின்னர் மீண்டும் வானவேடிக்கையை காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும். இப்படி செய்யும் பொழுது பேட்ஸ்மேன்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரலாம். நம்மிடம் இருக்கும் பேட்ஸ்மேன்களை நாம் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை. அணியின் கேப்டன் மனநிலையை மாற்றி இப்படி ஒரு அணுகுமுறைக்கு மாற வேண்டும்.

3வது டி20ல் இலங்கை அணிக்கு, இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை வெளிக்காட்ட வேண்டும். முதல் இரண்டு போட்டிகளில் அவர்கள் அதை பார்க்கவில்லை.” என்றார்.

Mohamed:

This website uses cookies.