இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீவில்லியர்ஸ் ஆகியோருடன் விளையாட வேண்டும் என்கிற என்னுடைய கனவு நனவாகிவிட்டது என்று சென்னையைச் சேர்ந்த வீரர் வாஷிங்டன் சுந்தர் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ரைஸிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த வாஷிங்டன் சுந்தர், தோனி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து விளையாடினார். ஆல்-ரவுண்டரான சுந்தரை ரூ.3.3 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த முறை ஐ.பி.எல். ஏலத்தில் விலைக்கு வாங்கியது. இவரின் அடிப்படை விலை ரூ. ஒரு கோடியாகும்.

இந்நிலையில், வாஷிங்டன் சுந்தர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி என்னை தேர்வு செய்து இருப்பதை நினைத்து வியக்கிறேன். விராத் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரின் தீவிர ரசிகன் நான்,. கோலியுடனும், டீவில்லியர்ஸ் உடனும் விளையாட வேண்டும் என்கிற எனது கனவு நனவாகிவிட்டது.
கடந்த ஆண்டு ரைஸிங் புனே அணியில், தோனியுடன் விளையாடிய அனுபவம் உண்மையில் விலை மதிக்க முடியாதது. இப்போது பெங்களூரு அணியில் கோலியுடன் விளையாடப் போகிறேன் என்பது கடவுளின் ஆசியாகவே கருதுகிறேன்.

Photo by Shaun Roy – Sportzpics – IPL
பெங்களூரு அணியில் இடம் பெற்று, இன்னும் கிரிக்கெட் தொடர்பான பல நல்ல, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். எனது குறிக்கோள் எனது திறமையை மேம்படுத்தி, கிடைக்கும் வாய்ப்புகளில் உயரே செல்ல வேண்டும் என்பதாகும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ரைஸிங் புனே அணியில் அஸ்வின் இல்லாததன் காரணமாக சுழற்பந்துவீச்சுக்கு வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, தமிழக அணியின் கேப்டன் விஜய் சங்கரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.3.2 கோடிக்கு விலைக்கு வாங்கியது. கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியில் இடம் விஜய் சங்கர் இடம் பெற்று இருந்தார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர் டி நடராஜன் கடந்த ஆண்டு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த ஆண்டு ரூ.3 கோடிக்கு நடராஜனை சன் ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது