கிரிக்கெட்டில் அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் வீரர்கள் ஓய்வறை என்பது ஒரு கல்வி வகுப்பறைதான், இங்கு அந்தத் துறை சார்ந்த பாடங்கள் மற்றும் கற்றுக் கொள்ளப்படுவதில்லை, உணர்ச்சிகள், நட்புறவுகள், தனிமனிதர்களுக்கு இடையிலான உணர்வுகள், இளம் வீரர்கள் எட்ட இருந்து ரசித்த ஆளுமைகளை அருகிலிருந்து பார்க்கும் போது அவர்களுடைய செயல்பாடுகள் என்று ஏகப்பட்ட வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் இடம்தான் வீரர்கள் ஓய்வறை.
இதில் மீண்டு புறப்பட்டவர்களும் உண்டு, இதனைத் தாங்க முடியாமல் தோல்வியடைந்தவர்களும் உண்டு, இந்தச் சோதனையில் வெற்றி பெற்ற பலவீரர்களில் விராட் கோலியும் ஒருவர்.
இந்த ஓய்வறை அச்சுறுத்தல் பற்றி ஏற்கெனவே பிரையன் லாரா தன் அனுபவத்தை எழுதியுள்ளார். குறிப்பாக கர்ட்லி ஆம்புரோஸ் தன்னைப் பாடாய்ப் படுத்தியதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு முறை ஷார்ஜாவில் பாகிஸ்தான் அணி மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியொன்றில் பெரிய ரன்களைக் குவித்த போது ஆம்புரோஸ் அதில் அதிக ரன்களைக் கொடுத்து கடுப்புடன் பெவிலியன் வந்தார். ஆம்புரோஸை புரட்டி எடுத்த அந்த பாகிஸ்தான் வீரர் பெயர் பாஸித் அலி. மீண்டும் மே.இ.தீவுகள் இறங்க வேண்டும் அப்போது, லாரா தொடக்க வீரர், எதிரணியினருக்கு அவர் ஏற்கெனவே சிம்ம சொப்பனம்தான், ஆனால் ஆம்புரோஸ், லாராவிடம் வந்து ‘இன்று நீ ஜெயித்து விட்டு வரவில்லையெனில் உன்னை சும்மா விட மாட்டேன்’ என்று கூறி மிரட்டியதை லாரா பிற்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் உலகக்கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவ், பிஷன் பேடி தலைமையில் ஆடும்போது இவரது ஆங்கில அறிவை நட்பு ரீதியாகக் கலாய்க்க பிஷன் பேடி ஆங்கில நாளிதழைக் கொடுத்து அவர் தாறுமாறாக உச்சரிப்பதையும் தப்பும்தவறுமாக படிப்பதையும் கேட்டு ரசிப்பார் என்றும் மற்ற வீரர்களும் ரசிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் பிறகு கபில் தேவ் ஆங்கிலத்தையும் ஊதினார் என்பது வேறு கதை.
இந்திய ஒருநாள் அணியில் 2008-ல் அறிமுகமானார் விராட் கோலி, டி20-யில் 2010-ல் வந்தார், 2011-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இந்நிலையில் விராட் கோலி தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்:
நான் என் அம்மாவுடன் அமர்ந்திருந்தேன், இருவரும் செய்தி சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தோம், என் பெயர் அணியின் பெயர் பட்டியலில் பிளாஷாகிச் சென்றது, நான் நம்பவில்லை, வதந்தியாக இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் 5 நிமிடங்களுக்குப் பிறகு பிசிசிஐயிடமிருந்து அழைப்பு வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
அப்போதெல்லாம் ஓய்வறையில் இருந்த நடைமுறை என்னையும் அச்சுறுத்தியது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அணி கூட்டத்துக்குச் சென்றேன் நான். அணி வீரர்கள் அறையில் என்னை அழைத்து உரையாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினர்.

பெரிய பெரிய தலைகளெல்லாம் இருக்கும் போது நான் போய் பேசுவதாவது… எனக்கு தலை சுற்றியது. அவர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். இது எனக்கு நரம்புத் தளர்ச்சியையே ஏற்படுத்தி விட்டது.
இதைத்தான் இப்போது நாங்கள் புதிதாக வரும் வீரர்களுக்குச் செய்கிறோம். இதுதான் என் முதல் நினைவுகள். என்றார் விராட் கோலி.