ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட உடல்நல பரிசோதனைக்கு இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா சென்றார் என சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வந்தன. ஆனால், துலீப் ட்ரோபி 2017 இறுதி போட்டியில் பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா சோபிக்கவில்லை.
முதல் இன்னிங்சில் இந்தியா ரெட் அணி 423 ரன் அடித்தது. இந்த ரன்னை துரத்திய இந்தியா ப்ளூ அணி, தொடக்கத்திலேயே முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா ப்ளூ அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை அடிக்க நினைத்த ரெய்னா பந்தை தவற விட்டார், இதனால் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ரெய்னாவை ஸ்டும்ப்பிங் செய்தார். இதன் பிறகு அந்த அணி 123 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு மிதுன் மற்றும் உனட்கட் ஆகியோர் பொறுமையாக விளையாடி 181 ரன்னில் இருக்கும் போது, அந்த நாளின் ஆட்டநேரம் முடிவடைந்தது.
இவரது இந்த மோசமான பேட்டிங் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது சந்தேகம் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் அவர் சிறப்பாக விளையாடினால் தான் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என நிலை இருக்கும் போது, கடந்த மூன்று இன்னிங்சில் 93 ரன் மட்டுமே அடித்துள்ளார்.
கடைசியாக இந்திய அணிக்காக 2015இல் ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். 2016-இல் நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்கு தேர்வானார், ஆனால் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவரால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ரெய்னா மூன்று போட்டிகளில் 104 ரன் அடித்து அசத்தினார். ஆனால் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் வர முடியவில்லை.