மே.இ.தீவுகள் அணி, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடிய பிறகு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து – மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் அட்டவணை சமீபத்தில் வெளியானது. ஜூலை 8 முதல் மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்டுகளில் எந்த ஒரு வீரராவது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை அனுமதிக்க வேண்டும் என இதுதொடர்பாக ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில், மே.இ.தீவுகள் அணி, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடிய பிறகு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அணிகளிடம் பேசி வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து ஆகிய அணிகள் இங்கிலாந்துக்கு வருகை தந்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளோம். இது மிகவும் சவாலானது. ஆனால் பலன் தரக்கூடியது. இதற்கு முன்பு செய்யாத ஒரு காரியத்தை செய்ய நாங்கள் தயாராகி வருகிறோம். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து ஆகிய அணிகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் பேசி வருகிறோம். இத்தொடர்களை நடத்த நாங்கள் பல வேலைகளைச் செய்யவேண்டியிருக்கிறது. மே.இ.தீவுகள் அணி முதலில் இங்கிலாந்துக்கு வருகிறது. இதன்பிறகு இதர அணிகளையும் வரவழைத்து இங்கிலாந்தில் தொடர்களை நடத்த முயற்சி செய்து வருகிறோம் என்றார்.