டி20 கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக 250 ரன்கள் குவித்து இங்கிலாந்து பெண்கள் அணி உலக சாதனைப் படைத்துள்ளது.
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல, டி20-யில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து பெண்கள் அணி
இங்கிலாந்தில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணி பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

முதலில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கேப்டன் சுஜி பேட்ஸ் (64 பந்தில் 124), டிவைன் (48 பந்தில் 73) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. இதன்மூலம் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்தது. இதற்கு முன் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 209 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது.

பின்னர் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்அப்பிரிக்கா வீராங்கனையால் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தத. இதனால் நியூசிலாந்து பெண்கள் அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்பின் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை டாமி பீமோண்ட் அதிரடியாக விளையாடி 52 பந்தில் 116 ரன்கள் குவிக்க 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. இதன்மூலம் பெண்களுக்கான டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

காலையில் நியூசிலாந்து அணி பெற்ற சாதனையை மாலைக்குள் இங்கிலாந்து தட்டிப்பறித்தது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஆண்கள் அணி 481 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.