ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.
கிரிக்கெட் உலகில் தரவரிசை என்பது முக்கியமான ஒன்றாகும். ஒரு ஆண்டில் ஒரு அணியின் ஆட்டம், மேம்பாடு, முன்னேற்றம், வெற்றி உள்ளிட்ட இவை அனைத்தையும் அதன் தரவரிசை எண் பிரதிபலிக்க கூடிய ஒன்று. அதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், இயான் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி, தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2014-15 ஆம் ஆண்டு நடந்த 25 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று தனக்கான அங்கிகாரத்தில் சற்று பின்தங்கியிருந்தது. இந்த காலக்கட்டத்தை கணக்கில் கொள்ளாமல் 2015-16 மற்றும் 2016-17 ஆண்டு நடைபெற்ற போட்டிகளை கணக்கில் கொண்டு தற்போது தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 8 புள்ளிகள் அதிகமாக பெற்று 125 புள்ளிகளுடன், முதலிடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்குத் தள்ளியுள்ளது இங்கிலாந்து அணி.
இந்திய அணி ஒரு சிறப்புபுள்ளியை இழந்து 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென்னாப்ரிக்கா அணி 4 புள்ளிகளை இழந்து 113 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், 112 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 4வது இடத்திலும், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி 104 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் முறையே உள்ளது.
6வது இடத்தில் பாகிஸ்தான் அணியும், வங்கதேசம், இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து என அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
டெஸ்ட் தரவரிசையை பொருத்த வரை இந்திய அணி 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. டி20 கிரிக்கெட் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை புள்ளிகளுடன்
1)இங்கிலாந்து 125 (+8)
2)இந்தியா 122 (-1)
3)தென்னாப்ரிக்கா 113 (-4)
4)நியூசிலாந்து 112 (-2)
5)ஆஸ்திரேலியா 104 (-8)
6)பாகிஸ்தான் 102 (+6)
7)வங்கதேசம் 93 (+3)
8)இலங்கை 77 (-7)
9)மேற்கிந்திய தீவுகள் 69 (-5)
10)ஆப்கானிஸ்தான் 63 (+5)
11)ஜிம்பாப்வே 55 (+4)
12)அயர்லாந்து 38 (-3)