இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) சவுதம்டனில் நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தீர்மாணித்துள்ளது.
அணிகள்:
மேற்கிந்தியத் தீவுகள்: கிங் கெயில், எவின் லூயிஸ், ஷை ஹோப்ஸ், நிக்கோலஸ் பூரன், சிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் , ஆண்ட்ரே ரஸ்ஸல், கார்லோஸ் ப்ராத்வாட், ஷெல்டன் கோட்ரெல், ஷானோன் கேப்ரியல், ஓஷேன் தாமஸ்
இங்கிலாந்து : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், இயோன் மோர்கன், ஜோஸ் பட்லர் , பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளென்கட், Jofra ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட்
இங்கிலாந்து அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 14 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. முந்தைய ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை எளிதில் சாய்த்தது.
இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், ஜோரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருகிறார்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், பிளங்கெட் மிரட்டுகிறார்கள். இதில் வெஸ்ட்இண்டீசில் பிறந்து இங்கிலாந்து அணியில் சமீபத்தில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடி பணிந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், ரஸ்செல், நிகோலஸ் பூரன், பிராத்வெய்ட், ஷாய் ஹோப் ஆகியோர் நிலைத்து நின்று விட்டால் அபாயகரமான பேட்ஸ்மேன்களாக உருவெடுத்து விடுவார்கள். பந்து வீச்சில் ஒஷானே தாமஸ், காட்ரெல், ரஸ்செல் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளிலும் அதிரடி பேட்ஸ்மேன்களும், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் அங்கம் வகிப்பதால், ஆட்டத்தில் அதிரடிக்கும், பரபரப்புக்கும் குறைவு இருக்காது எனலாம்.

சவுதம்டனில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் ஆடுகளம் மூடப்பட்டு இருந்தது. மழை சாரலுக்கு மத்தியிலும் இங்கிலாந்து அணியினர் ஜாலியாக பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பிற்பகலில் மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.