தான் எப்போதும் கிரிக்கெட்டை என்ஜாய் செய்து விளையாட வேண்டும். அதற்காக தான் தனது அனைத்து பேட்டின் கைப்பிடியில் Fu*k என எழுதி வைத்துள்ளதாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். அதனை பார்க்கும் போதெல்லாம், நன்றாக என்ஜாய் செய்தி ஆட வேண்டும் என்ற எண்ணம் தான் தனக்கு வரும் எனவும் கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.
ஐபிஎல் 2018 போட்டித் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஜோஸ் பட்லர் தனது அதிரடி பேட்டிங் மூலம் ராயல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்ததோடு, இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் அவர் மீண்டும் அழைக்கப்பட காரணமாக அமைந்தது.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்தைப் பந்தாடினாலும் ஜோஸ் பட்லர் 67 ரன்களை எடுத்தார், 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து பழிதீர்ப்பு பதிலடி கொடுத்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் அதிரடி முறையில் 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார், இந்த ஆட்டம் அவரது டெஸ்ட் வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்திய இன்னிங்ஸாகப் பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் ஐபிஎல் கிரிக்கெட்தான் என்று புகழ்ந்து பேசியுள்ளார் பட்லர்.
இந்நிலையில் ஜோஸ் பட்லர் கூறியிருப்பதாவது:
ஐபிஎல் கிரிக்கெட்டில் அந்த 2 வாரங்கள் ஆடியது என் நம்பிக்கையை பெரிய அளவில் அதிகரித்தது.
இந்தியாவில் அந்தப் பெரிய ரசிகர்கள் கூட்டம் முன்னிலையில் அதிக அழுத்தத்தில், ஒரு வெளிநாட்டு வீரராக ஆடியது என் நம்பிக்கையை அதிகரித்தது.
ஐபிஎல் எனக்கு நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்பதையும் நான் எங்கு போக முடியும் என்பதையும் அறிவுறுத்தி நம்பிக்கையூட்டியது.
பந்தின் நிறம் பற்றிய கவலையில்லாமல் (அதாவது டெஸ்ட், ஒருநாள், டி20, சிகப்புப் பந்து, வெள்ளைப்பந்து) ஆடியது எனக்கு டெஸ்ட் போட்டியில் உதவியது. பந்துக்கு ஆட வேண்டும் அவ்வளவே, டெஸ்ட், ஒருநாள், டி20 என்று பிரித்துப் பார்ப்பதில் பயனில்லை என்பதைக் கற்றுக் கொண்டேன்.
இப்போது நான் என்னை நம்புகிறேன், புறக்காரணிகள், சூழல்களின் அழுத்தம் எனக்கு இப்போது இல்லை. அதனால் 5 நாள் கிரிக்கெட்டின் தேவைக்கேற்ப என்னால் இனி ஆட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
டி20-யில் ஒரு போட்டியில் சோபிக்க முடியாவிட்டால் அடுத்த போட்டி உடனடியாக கிடைக்கும், அதில் நிரூபிக்கலாம் ஆனால் டெஸ்ட் போட்டியில் சரியாக ஆடாமல் போனால் அதைப்பற்றி யோசித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
இப்போது ரன்கள் சேர்ப்பது எப்படி என்று என் சிந்தனை மாறிவிட்டது, முன்பு அவுட் ஆகாமல் இருப்பது எப்படி என்று அதிகம் யோசிப்பேன். இந்த மன நிலையிலிருந்து வெளிவர அணியிலிருந்து நீக்கப்பட்டது மறைமுகமான நன்மையாயிற்று. நீக்கப்பட்டது என் அழுத்தத்தைக் குறைத்தது. தற்போதைய மனமாற்றத்தினால் துபாயில் ஒருநாள் சதம் ஒன்று அடித்தேன். கடினமான 6 மாத காலத்துக்குப் பிறகு இந்தச் சதம் எனக்குத் திருப்பு முனையை ஏற்படுத்தியது.