டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சச்சின் டெண்டுல்கரின் சிக்சர் சாதனையை சமன் செய்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி.
நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி இந்திய லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் எண்ணிக்கை ஒன்றை சமன் செய்து அசத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக கால்லே டெஸ்ட் போட்டியில் டிம் சவுதி 19 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார், இந்த இன்னிங்சின் போது இலங்கை ஆஃப் ஸ்பின்னர் தனஞ்ஜய டி சில்வாவின் பந்தை மிகப்பெரிய சிக்சர் ஒன்றை அடித்தார். இது டிம் சவுதி டெஸ்ட் போட்டிகளில் அடிக்கும் 69வது சிக்ஸ் ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 69 சிக்சர்களை விளாசியுள்ளார். டிம் சவுதி தற்போது அதே எண்ணிக்கையைச் சமன் செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 329 இன்னிங்ஸ்களில் 69 சிக்சர்களையும் டிம் சவுதி 89 இன்னிங்ஸ்களிலும் 69 டெஸ்ட் சிக்சர்களையும் அடித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய சிக்சர்களை அடித்துக் கொண்டுதான் இருந்தார், ஆனால் ஒருமுறை முழங்கை காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சமயத்தில் அவர் சில ஷாட்களை தவிர்க்க நேரிட்டது. உதாரணமாக ஹூக், புல்ஷாட்களை மிகவும் தவிர்க்க முடியாத கட்டத்திலேயே அவர் அடித்தார். அதே போல் முழங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் ஸ்லாக் ஸ்வீப்பையும் அவர் கொஞ்சம் தவிர்த்து வேறு வேறு ஷாட்களுக்குச் சென்றார். மேலும் அவர் ஹெவி பேட் பயன்படுத்தியதும் அவரது மணிக்கட்டு, முழங்கை, முதுகு என்று அழுத்தத்தை அதிகரித்தது.
ஆகவே இந்த சிக்சர் ஒப்பீடு செய்யக் கூடாதது என்றாலும் ஒரு எண்ணிக்கை அளவு சமன், புள்ளிவிவரங்கல் நம்பர் பற்றியது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
டெஸ்ட் கிரிகெட்டில் 176 இன்னிங்ஸ்களில் 107 சிக்சர்களுடன் பிரெண்டன் மெக்கல்லம் முதலிடம் வகிக்கிறார், கில்கிறிஸ்ட் 100 சிக்சர்கள், கெய்ல் 98 சிக்சர்கள், காலிஸ் 97 சிக்சர்கள், சேவாக் 91 சிக்சர்கள்.