சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 47வது பிறந்தநாள். இதற்காக ஐசிசி, பிசிசிஐ உட்பட விராட் கோலி முதல் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை முதன் முதலில் ஸ்லெட்ஜ் செய்ய முயன்றது பற்றியும் அதற்கு சச்சின் அளித்த பதிலையும் பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னார் சக்லைன் முஷ்டாக்.
இருவரும் விளையாடும் காலத்தில் சச்சினை அவரும் படுத்தியுள்ளார், சச்சினும் அவரை புரட்டி எடுத்துள்ளார். இந்நிலையில் கனடா டொராண்டோவில் 1997-ம் ஆண்டு சஹாரா கோப்பையில் சச்சின் டெண்டுல்கரை முதன் முதலில் ஸ்லெட்ஜ் செய்ததாகவும் அதுவே கடைசி ஸ்லெட்ஜாகவும் அமைந்ததையும் சக்லைன் முஷ்டாக் விவரித்துள்ளார்.
“முதலில் அவரை ஸ்லெட்ஜ் செய்தேன், என்ன கூறினேன் என்று நினைவில்லை, ஆனால் சச்சின் என்னிடம் கூறியது என் மனதைப் பிசைந்ததால் நினைவில் இன்னமும் உள்ளது.
நான் ஸ்லெட்ஜ் செய்தவுடன் அவர் என்னிடம் வந்து, ‘நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டேனா, நீ ஏன் என்னிடம் தவறாக நடந்து கொள்கிறாய்?’ என்று கேட்டார். எனக்கு தர்மசங்கடமானது, நான் என்ன கூறுவது என்று தெரியாமல் முழிக்கத்தான் வேண்டியிருந்தது.
சச்சின் மீண்டும் என்னிடம், ‘உங்களை நான் ஒரு வீரராகவும் மனிதராகவும் உயர்நிலையில் வைத்திருக்கிறேன்’ என்றார், எனக்கு இன்னும் என்னவோ போல் ஆகிவிட்டது. ஆட்டம் முடிந்தவுடன் நான் மன்னிப்புக் கேட்டேன்.
அதன் பிறகு அவர் என் பந்துகளை தாறுமாறாகக் கிழித்தாலும் நான் ஸ்லெட்ஜ் செய்ய முற்படவில்லை” என்றார் சக்லைன் முஷ்டாக்.
தன்னுடைய பிறந்தநாளையொட்டி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள சச்சின் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார், அதில் ”இந்த ஊரடங்கு கால அனுபவங்களைப் பகிர்ந்த அவர் “என்னுடைய தினசரி நாள் உடற்பயிற்சியுடன் தொடங்கும்.
பின்பு என்னுடைய அகாடெமி தொடர்பான வேலைகளில் பிஸியாக இருப்பேன். இப்போது ஊரடங்கு இருப்பதால் எங்கேயும் வெளியே செல்வதில்லை. என் மனைவி மற்றும் மகன், மகள்களுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், இப்போதுதான் என் அம்மாவுடன் அதிக நேரம் செலவழிக்கிறேன்” என்கிறார்.

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் “ஊரடங்கு நாள்களில் கேம்ஸ் விளையாடுவது, திரைப்படங்கள், டிவி சீரியல்கள் பார்ப்பது. பின்பு இசையைக் கேட்பது. 1970களில் தொடங்கி இப்போது வந்திருக்கும் இசை முழுவதும் நான் கேட்பேன். நான் எந்தப் பாடலை கேட்க வேண்டும் என்பதை என் பிள்ளைகள்தான் முடிவு செய்வார்கள். அவர்களுடன் பழகும்போது அவர்களின் ரசனையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மேலும், அவர்கள் என் ரசனை என்னவென்று ஏற்கெனவே அறிந்தும் வைத்திருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு யோசனை சொல்லியுள்ள சச்சின் “இது விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் கடினமான காலம்தான். இந்தக் காலகட்டத்தில் உடற் தகுதியில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் மனோபலத்தையும் அதிகரிக்க வேண்டும். இந்தக் காலகட்டம் எதிர்காலத்தில் வீரர்களுக்கு நல்ல பயனைக் கொடுக்கும். இந்த நாட்களும் கடந்து போகும் என்று நினைத்து, வர இருக்கும் எதிர்காலச் சவால்களுக்கு நம்மை மேன்மைப்படுத்தி தயாராக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.