இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தொடர்ச்சியாக 2-வது சதத்தை இன்று எடுத்த ஏரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்களை விரைவில் எடுத்து வார்னரின் ஆஸ்திரேலிய சாதனையை முறியடித்துள்ளார்.
பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய பிஞ்ச் தொடர்ச்சியாக 2வது சதத்தை எடுத்தார், ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பேர்ஸ்டோ, ஹேல்ஸ் அரைசதங்களுடனும் ஜோ ரூட் (46), பட்லர் (42) ஆகியோரது முக்கியப் பங்களிப்புகளினாலும் 44.2 ஓவர்களில் 274/6 என்று வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 2 விக்கெட்டுகளையும், 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகவும் இருந்த ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார்.

பிரிஸ்பனில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் ஏரோன் பிஞ்ச் சதம் எடுத்தார், 114 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் அடில் ரஷீத்தை லான் ஆன் மீது 105 மீ சிக்ஸ் அடித்து 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பிஞ்ச். ஆஸ்திரேலியா 270 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இந்தச் சதத்தின் மூலம் 83 இன்னிங்ஸ்களில் ஏரோன் பிஞ்ச் தனது 10வது ஒருநாள் சதத்தை எடுத்துள்ளார். வார்னர் 10 சதங்களை 85 இன்னிங்ஸ்களில் எடுத்ததே ஆஸ்திரேலிய சாதனையாக இருந்து வந்தது.

மார்க் வாஹ் 125 இன்னிங்ஸ்களில் 10 ஒருநாள் சதங்களையும், ஹெய்டன் 138 இன்னிங்ஸ்களில் 10 சதங்களையும் ரிக்கி பாண்டிங் 149 இன்னிங்ஸ்களில் 10 சதங்களையும் ஆடம் கில்கிறிஸ்ட் 174 இன்னிங்ஸ்களில் 10 சதங்களையும் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் குவிண்டன் டி காக் 55 இன்னிங்ஸ்களில் 10 சதங்களை எடுத்து முதலிடம் வகிக்கிறார். அடுத்ததாக ஹஷிம் ஆம்லா 57 இன்னிங்ஸ்களிலும் ஷிகர் தவண் 77 இன்னிங்ஸ்களிலும் கோலி 80 இன்னிங்ஸ்களிலும் 10 சதங்களை எட்டியுள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை எடுத்த 50வது வீரரானார் ஏரோன் பிஞ்ச்.