உங்களை விட்டு பிரிய மனமில்லை… கொல்கத்தா ரசிகர்களின் மனதை வென்ற கவுதம் காம்பீர்
ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடரில் டெல்லி அணிக்காக விளையாட உள்ள கவுதம் காம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மிஸ் செய்ய போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை குவித்து எடுத்து கொண்டன. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் பலம் பொருந்திய அணியாக இந்த ஆண்டு களம் காண உள்ளது.
இதில் கிறிஸ் லின், ஸ்டார்க் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலரை கொல்கத்தா அணி தனது அணியில் எடுத்து கொண்டாலும், இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கழட்டி விடப்பட்டது ரசிகர்களிடையே பெரிய அதிர்சியை ஏற்படுத்தியது. மேலும் வரும் தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்த போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா அணியை இனி வரும் தொடர்களில் மிஸ் செய்ய போவதாக அந்த அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த கவுதம் காம்பீர் தனது ட்விட்டர் பக்கதுதில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கவுதம் காம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “கொல்கத்தா அணியுடனான ஒவ்வொரு தருணங்களையும் இழக்க போகிறேன். ஆனால் கொல்கத்தா அணியின் தீவிர ரசிகரான ஹர்ஷுல் கோயங்காவை நான் இழக்க தயாராக இல்லை. அவரை டெல்லி அணியின் ரசிகராக்க முயற்சிகளை மேற்கொள்வேன். என்று பதிவிட்டுள்ளார்.
ரசிகரை மறக்காமல் தனது ட்விட்டர் பக்கத்திலேயே அவரை பற்றிய பேசிய கவுதம் காம்பீரை கொல்கத்தா ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.