இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்ஸ்மேன் செய்ய வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் விராட் கோலி 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும்- கங்குலி
இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கையில் நடைபெற்ற தொடரின்போது இந்திய அணி பல்வேறு பரிசோதனை செய்தது. அப்போது கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரகானே ஆகியோரை நான்காவது இடத்தில் களமிறக்கியது.
ஆனால் எந்த வீரரும் அந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை. இங்கிலாந்திற்கு எதிராக டி20 தொடரில் கேஎல் ராகுலை 3-வது இடத்தில் களமிறக்கி கோலி 4-வது இடத்தில் களமிறங்கினார். இதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கோலி கடைசி இரண்டு போட்டியில் தலா 40 ரன்களுக்கு மேல் அடித்தார்.
இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘டி20 தொடரை பார்த்தீர்கள் என்றால், பேட்டிங் வரிசை சரியாக அமைந்ததாக நான் நினைக்கிறேன். கேஎல் ராகுல் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் களம் இறங்கி விளையாடியதால், பேட்டிங்கில் இருந்து வந்த பிரச்சனை தீர்ந்ததாக நினைக்கிறேன்.
ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இதுபோன்று களம் இறங்குவது சிறப்பானதாக அமையும் என்பது என்னுடைய ஒட்டுமொத்த நம்பிக்கை. விராட் கோலி ஒருநாள் தொடரில் இந்த எண்ணத்தோடுதான் களம் இறங்குவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
இந்தியா ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (இ) , ஷிகார் தவான் , ரோகித் சர்மா , லோகேஷ் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் , டோனி , தினேஷ் கார்த்திக் , யுசவேந்திர சாஹல் , குல்தீப் யாதவ் , ஸ்ரதுல் தாக்கூர் , ஹர்திக் பாண்டிய , சித்தார்த் கவுல் , புவனேஸ்வர் குமார் , சுரேஷ் ரெய்னா , உமேஷ் யாதவ் , அக்சர் படேல்
இங்கிலாந்து ஒருநாள் அணி: இயோன் மோர்கன் (இ) , ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் , அலெக்ஸ் ஹேல்ஸ் , ஜோ ரூட் , ஜோஸ் பட்லர் , மொயின் அலி , பென் ஸ்டோக்ஸ் , டேவிட் வில்லி , லியாம் பிளென்கட் , அடில் ரஷீத் , மார்க் வூட் , ஜேக் பால் , சாம் கிர்ரன்