இங்கிலாந்து பிட்ச், வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கரின் பவுலிங் உதவிகரமாக இருக்கும் என்று கூறிய கங்குலி, உலகக்கோப்பையில் இந்திய அணி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேட்டியளித்துள்ளார்.
“விஜய் சங்கர் நிச்சயம் நன்றாக ஆடுவார், அவர் நல்ல இளம் கிரிக்கெட் வீரர். அவர் பவுலிங் உதவிகரமாக இருக்கும். அவரைப் பற்றி ஓவராக எதிர்மறையாக யோசிக்க வேண்டாம். ஆஸி. நியூஸிலாந்தில் அவர் நன்றாக ஆடியதால்தான் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஆம். ரிஷப் பந்த்தும் இந்த அணியில் இடம்பெற்றிருக்க வேண்டியவர்தான், ஆனால் அவர் கவலைப்பட வேண்டியதில்லை, அவருக்கு வயது இருக்கிறது. 20தான் ஆகிறது. அவர் சில உலகக்கோப்பைகளில் ஆடுவார்.

இந்திய அணி நம்பர் 7-ல் ஆல்ரவுண்டரையே விரும்புகிறது, அது வேகப்பந்து வீச்சுத் தெரிவாக இருந்தால் ஹர்திக்பாண்டியாவுக்குத்தான் முதல் வாய்ப்பு, பாண்டியா காயம் அடைந்தால்தான்ஜடேஜாவுக்கு, வாய்ப்பு. இதன் மூலம் 3 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க முடியும்.
இந்த முறை 1992 வடிவம் போல் ஒவ்வொரு அணியும் மற்ற எல்லா அணிகளுடனும் மோத வேண்டும். கடந்தமுறை ஒன்றிரண்டு பலவீனமான அணிகள் ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும். இந்த முறை இது வாய்ப்பில்லை. வெஸ்ட் இண்டீச் வலுவாக உள்ளது, ஆஸ்திரேலியாவும் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளது, நியூஸிலாந்து வலுவானது, இந்தியா வலுவானது, பாகிஸ்தான் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியது.
குல்தீப் யாதவ் மிகப்பெரிய திறமை சாலி, இம்முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் சரியாக வீசாததற்கு ஈடன் கார்டன்ஸ் பிட்ச்தான் காரணம், இங்கு யாரும் நன்றாக வீசி விட முடியாது. குறைந்த பட்ச ஸ்கோர் 220-230 ஆக உள்ளது. டி20 கிரிக்கெட்டை வைத்து ஒரு பவுலரின் திறமையை எடைபோட முடியது. நிச்சயம் உலகக்கோப்பையில் குல்தீப் யாதவ் ஒரு பெரிய வலுதான்” என்றார் கங்குலி