தன்னுடன் ஆடிய வீரர்களுக்கு விவிஎஸ் லஷ்மண் புகழாரம் சூட்டி வருகிறார். அந்தப் பட்டியலில் தற்போது பாஜக எம்.பி.யாகியிருக்கும் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீரை புகழ்ந்துள்ளார்.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கம்பீர் குறித்து பதிவிட்டதாவது:
“பெரிய அளவில் அறிவு ஆர்வமுள்ளவர், ஆட்டத்தின் மீது தீராப் பிடிப்பு உள்ளவர். கிரிக்கெட் களத்தில் சவால்களை கண்டு அவர் அஞ்சியதில்லை. அதாவது நல்ல பவுலிங் சாதக ஆட்டக்களங்களில் அதிவேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போதும் சரி, தவறிழைக்கப்பட்ட சக வீரருக்கு ஆதரவு அளிப்பதாக இருந்தாலும் சரி, பின் வாங்குவது என்பதை அறியாதவர் கவுதம் கம்பீர்” என்று கூறியுள்ளார் லஷ்மண்.
2003-ல் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆனார். 58 டெஸ்ட் போட்டிகள், 147 ஒருநாள் போட்டிகள், 37 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 4154 ரன்கள், 147 ஒருநாள் போட்டிகளில் 5238 ரன்கள், டி20களில் 932 ரன்களை எடுத்துள்ளார் கம்பீர்.
ஒருமுறை நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய ஒருநாள் அணிக்குக் கேப்டனாக இருந்திருக்கிறா, அந்தத்தொடரை வென்றார். தோனி தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையை வென்ற போது கம்பீர் அந்த அணியில் 7 இன்னிங்ஸ்களில் 227 ரன்கள் என்று அதிக ஸ்கோரை எடுத்தவராக இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இறுதிப் போட்டியில் 54 பந்துகளில் 75 ரன்களை விளாசினார்.
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் உலகமே தோனி தோனி என்று உச்சாடனம் செய்து கொண்டிருந்த போது கம்பீரின் 97 ரன்களை எளிதில் மறந்து விட்டிருந்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டிலும் கேப்டன்சியில் முத்திரைப் பதித்த கம்பீர் கொல்கத்தா அணியை இருமுறை 2012, 14 தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்லச் செய்தார்.
டிசம்பர் 2018-ல் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். அரசியலில் நுழைந்து கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி.யுமாகி விட்டார் கம்பீர்.